Category Archives: Uncategorized

சுனாமியின்போது கல்பாக்கம் அணு உலைகள் எவ்வாறு பாதிக்கப்பட்டன?


ஒரு நேரடி ரிப்போர்ட்.

27.12.2004

டாக்டர் .வீ.புகழேந்தி MBBS

………………………………………………………………………………

கல்பாக்க அணுஉலைகளுக்கு சுனாமி இதுவரை அறிமுகமாகாத விருந்தாளி. அது 26.12.2004 அன்று காலை 8.50 – 9.10 மணிக்குக் கல்பாக்கத்தைத் தாக்கியது.

அணுஉலை வளாகத்தை சுனாமி தாக்கியதால் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளையும், சேதங்களையும் குறித்து புதுப்பட்டிணத்திலும், வாயலூரிலும், சதுரங்கப்பட்டிணத்திலும் வாழும் மக்கள் மத்தியில் கடந்த 14 வருடங்களாகப் பணி புரிந்து வரும் என்னிடம் என்னைக் காண வருபவர் பலர் கூறினர். அவற்றை இங்கு தொகுத்து அளித்துள்ளேன்.

இவை உண்மையா, பொய்யா ஏன்பதை அறிய முடியாத சூழ்நிலையில், இதனால் ஏற்பட்டிருக்கும் அச்சத்தைத் தவிர்ப்பது அணுசக்தித் துறை, தமிழக மற்றும் இந்திய அரசின் கடமைகளென நான் கருதுகிறேன். இந்தக் கருத்துக்களை உண்மையா, பொய்யா என்பதனை உறுதி செய்ய அணுசக்தித் துறை சாராத உரிய அதிகாரம் நிரம்பிய பொதுமக்கள் பரிசீலனைக் குழு ஒன்று உலை வளாகத்தைப் பார்வையிட்டு உண்மையை அறிந்திட மத்திய அரசு அனுமதி அளித்திட வேண்டும் ஏன்ற விண்ணப்பத்தையும் இங்கு நான் முன்வைக்கிறேன்.

………………………………………………………..

மெட்ராஸ் அட்டாமிக் பவர் ஸ்டேஷன் (MAPS 1 and 2) அணுஉலைகளைக் குளிர்விப்பதற்காக குழாய்கள் மூலம் கடல் நீர் உள்ளே கொண்டுவரப் படுகிறது.

கடலுக்கு உள்ளே செல்லும் குழாய்களைக் காவல் காக்க மைய தொழில் பாதுகாப்புப் படையைச் (Central Industrial Security Force -CISF) சேர்ந்த இருவர் பணியில் அமர்த்தப் படுவர். சுனாமி கல்பாக்கத்தைத் தாக்கிய அன்று கடல் அலைகளால் ஒருவருக்கு பலத்த அடி ஏற்பட்டது. அவர் தற்சமயம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடலையும் அணு உலைகளையும் பிரிக்கும் தடுப்புச் சுவர் பல இடங்களில் தகர்த்தெறியப்பட்டுள்ளது.

கடற்கரையில் இருந்து நிலப்பகுதியை நோக்கி ஏறக்குறைய 200 – 550 மீட்டர் வரை கடல் அலைகள் உள்ளே வந்துள்ளன.

நீறேற்றும் கட்டிடம் (Pump House) வரை கடலலைகள் மேலெழும்பி வந்துள்ளன ஏன்பதை நிர்வாகமே ஒப்புக் கொண்டுள்ளது. நீரேற்றும் கட்டிடத்தில் உள்ள மோட்டார்கள் கடலலைகளில் மூழ்கியதால் அவை தாமாகவே டிரிப் இகியிருக்கின்றன. மின்சாரம் உற்பத்திப்பதற்குத் தேவையான ராட்சத செதில் சக்கரங்கள் (Turbines) உள்ள பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த பொறியாளருக்கு இது தெரிய வந்ததால் அவர் (இயங்கிக் கொண்டிருந்த MAPS 2 அணு உலையை) டிரிப் செய்ததாகக் (Safe Shutdown) கூறப் படுகிறது.

(26 ஆம் தேதியன்று MAPS 2 அணு உலையின் இயக்கம் நிறுத்தப்பட்டு பின்னர் சில நாட்கள் கழித்து மேற்கொள்ளப்பட்ட) ஆய்வுகளுக்குப் பின்னர் அந்த உலையை இயக்கிய போது நீரேற்றும் கட்டிடத்தில் சிறு பிரச்சினை எழுந்ததாகவும், அதனைத் தனிக் குழாய்களை உயரத்தில் அமைத்து தீர்த்ததாகவும் தெரிகிறது.

இதன் பின்னர் MAPS 2 அணு உலை இயங்கத் தொடங்கியபோது Turbine பகுதியில் சிறு தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. இது சரி செய்யப்பட்ட பின்னரே அந்த அணுஉலை இயங்கத் தொடங்கியிருக்கிறது.

Pump Houseஐத் தாண்டி சுனாமி அலைகள் Turbine பகுதியில் புகுந்ததாக சிலர் கூறினர். சிலர் இந்த கூற்றை மறுத்தனர்.

MAPS அணுஉலை வளாகத்தில் உள்ள நில அதிர்வைப் பதிவு செய்யும் கருவி (Seismograph –பூகம்பமாணி) பேட்டரி சார்ஜ் இல்லாததால் சுனாமி உருவாகக் காரணமாயிருந்த நில அதிர்வையும், சுனாமியினால் உருவான நில அதிர்வையும், அதன் பின்னர் வந்த நில அதிர்வுகளையும் பதிவு செய்ய இயலவில்லை ஏன்று பலர் கூறினர்.

MAPS அணுஉலைகளின் (கதிரியக்கம் கூடுதலாக உள்ள) எரிந்து முடிந்த எரிபொருள்களை சேமித்து வைக்கும் பகுதி வரையிலும் (Spent Fuel Storage Area), (பல்லாயிர வருடம் கதிரியக்கத்தை வெளியிடும்) புளுட்டோனியத்தைப் பிரித்தெடுக்கும் ஆலை வரையிலும் (Plutonium reprocessing plant), கடல் நீர் சுனாமியின் போது வந்ததாகப் பலர் கூறுகின்றனர். இந்த இரு பகுதியிலும் கதிரியக்கம் அதிகம். இதனால் கதிரியக்கக் கசிவிற்கான வாய்ப்பு இருப்பதாகவே சொல்லப்படுகிறது.

அதை உறுதி செய்வதற்கு அணுசக்தித் துறை சாராத ஒரு தனிப்பட்ட மக்கள் குழுவிற்கு (இது குறித்து பொறுப்பும், அக்கறையும் உள்ள தனி நபர்/ நிறுவனங்களுக்கு) உரிய அதிகாரத்தை மத்திய அரசு அளிக்க வேண்டும் ஏன்று நான் கருதுகிறேன்.

தற்சமயம் 500 மெகாவாட் திறனுள்ள முன்மாதிரி வேக அணு உனி அணு உலைக்கான (Prototype Fast Breeder Reactor – PFBR) கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தக் கட்டுமானப் பகுதியின் அடித்தளம் முழுவதும் கடல் நீரில் மூழ்கிப் போயுள்ளது. அந்த சமயத்தில் அந்த இடத்தில் 150 ஒப்பந்தக் கூலிப் பணித் தொழிலாளிகள் பணியில் உடுபட்டிருந்ததாக அணுசக்தி நிர்வாகமே ஒப்புக் கொண்டுள்ளது.

சுனாமி அலையின் தாக்கத்தில் அருகில் வேலை செய்து கொண்டிருந்த பெண்மணி ஓருவர் மட்டுமே (பெயர்: காந்தம்மாள், தகப்பனார் பெயர்: தத்தையா, URC Company) இறந்து போனதாக அணுசக்தி நிர்வாகம் கூறுகிறது. இனால் சுனாமியின் போது இந்த இடத்தில் நிகழ்ந்த பிரச்சினைகள் குறித்து நமக்கு பல சந்தேகங்களும், அச்சங்களும் ஏற்பட்டுள்ளன. அவற்றை கீழே விவரிக்கிறேன்:

 

) PFBR இன் கட்டுமாணப் பணிகளுக்காக அதன் கீழ்பகுதி சுமார் 12 மீட்டர் ஆழம் வரை தோண்டப்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

இந்தக் குழிக்குள் இறங்கிட முறையாகப் படிகள் அமைக்கப்படவில்லை; பல இடங்களில் தொங்கும் ஏணிகள் மூலமாகக் கீழே இறங்கும்/ஏறும் நிலை இருந்திருக்கிறது; கான்கிரீட் கம்பிகள் / கட்டிட தளங்கள் இடையே உள்ள தொலைவை கட்டைகள் மூலமாகக் கடக்க வேண்டிய சூழ்நிலையும் இருந்திருக்கிறது” – இவை பலராலும் கூறப்படும் செய்திகள்.

இந்த இடத்தில் இருந்த கிரேனை இயக்கிக் கொண்டிருந்த பணியாளர் ஓருவரே கடல் கொந்தளித்து வருவதை முதலில் பார்த்திருக்கிறார். உடனே அவ்விடத்தில் இருந்தவர்களிடம் தான் பார்த்துக் கொண்டிருப்பதை சொல்லியிருக்கிறார்.

) கடல் இந்தப் பகுதிக்குள் நுழைந்து மீண்டும் பழைய இடத்திற்கு சுமார் 15 நிமிடங்களில் திரும்பிச் சென்றிருக்கிறது.

) மேற்கூறிய செய்திகளை மனதில் கொண்டால், இந்த இடத்தில் பணி செய்து கொண்டிருந்த 150 பேர்களில் பலர் இறந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவே படுகிறது. ஏனெனில், இந்த 12 மீட்டர் குழியில் இருந்து மேலேறி வருவதற்கே ஓவ்வொரு நபருக்கும் சுமார் 15 நிமிடங்கள் வரை ஆகும் என்பது என்னிடம் பேசிய பலரின் கூற்றாக இருக்கிறது.

) இந்த 150 பேர்களில் பெரும்பாலானோர் ஓரிசா மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் என்பது இது குறித்து விஷயம் தெரிந்த பலரால் கூறப்படும் செய்தியாகும். இவர்களனைவரும், சுனாமிக்குப் பிறகு பயந்து போய் தம் சொந்த மாநிலத்துக்கே ஓடிப்போய் விட்டனர் ஏன்பது அணுசக்தி நிர்வாகத்தின் கூற்றாகும். இந்தக் கூற்று நம்பும்படியாக இல்லை. இங்கு பலர் இறந்திருந்தால் அவர்களின் பிணங்கள் இருக்குமல்லவா? அவை இங்கு இல்லாதபோது அவர்கள் தம் சொந்த ஊர்களுக்கு யாருக்கும் சொல்லாமல் ஓடிப்போயிருப்பார்கள் என்றுதானே ஏடுத்துக் கொள்ள வேண்டும் என்பது நிர்வாகத்தினரின் வாதம்.

இருப்பினும், அணுஉலை நிர்வாகமும், இந்தக் கூலித் தொழிலாளர்களை ஒரிசா, பீகார் மாநிலங்களில் இருந்து அழைத்து வந்த Gammon India”சேர்ந்து இந்தக் கட்டுமானக் குழிக்கு அடுத்து ஒரு பெரிய பள்ளத்தைத் தோண்டி இந்தத் தொழிலாளிகளின் சடலங்களை புதைத்து விட்டன என்று பலரும் கூறுகின்றனர்.

இந்த இடத்தில் நுழைய இராணுவத்தினர் தவிர மற்ற எவரும் சுனாமிக்குப் பிறகு மூன்று நாட்களுக்கு அனுமதிக்கப்படவில்லை என்பது மேற்கூறிய செய்தி உண்மைதானோ என்ற அச்சத்தை நம்முள் ஏற்படுத்துவதாக உள்ளது.

PFBR அணுஉலையில் குளிர்விப்பானாக திரவநிலையில் உள்ள சோடியம் தனிமம் உபயோகப்படுத்தப்படும். திரவ நிலையில் உள்ள சோடியத்திற்கும், தண்ணீருக்கும் ஆகவே ஆகாது. இரண்டும் சேரும் தருணத்தில் பெரு வெடிப்புகள் நிகழும். கட்டுமான நிலையில் உள்ள PFBR உலையின் அடிப்பகுதி முழுவதுமே சுனாமி அலையில் மூழ்கிப் போயிருக்கிறது ஏன்ற சூழ்நிலையில் இந்த உலையை கடல் நீர் புக முடியாத வேறு ஓரு இடத்திற்கு மாற்றுவதுதானே அறிவுசார் முடிவாக இருக்க முடியும்?

இருப்பினும், PFBR கட்டுமான இடத்தை வேறு இடத்திற்கு எக்காரணம் கொண்டும் மாற்ற முடியாது என்று நிர்வாகம் கறாராகக் கூறியிருப்பது எதிர்காலத்தில் நமக்கு என்ன நிகழப்போகிறதோ என்ற அச்சத்தை இங்குள்ள எல்லோரிடத்தும் ஏற்படுத்துவதாக உள்ளது.

கதிரியக்கம் நிறைந்த அணுக்கழிவுகளைக் கையாளும் பகுதி Centralised Waste Management Faclity (CMF) ஏன்றழைக்கப்படுகிறது. இது கடற்கரையிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதென்பதுவும், இனிமேல் ஒருவேளை சுனாமி ஓன்று ஏற்பட்டால் அது தப்புமா என்பதுவும் ஏன்னிடம் பேசிய பலர் எழுப்பிய முக்கியமான கேள்வியாகும்.

இதுபோலவே புளுட்டோனியத்தைப் பிரித்தெடுக்கும் உலையான Kalpakkam Atomic Reprocessing Plant (KARP) கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டரில் அமைந்துள்ளது. இதுவும் எதிர்காலத்தில் நிகழ வாய்ப்புள்ள ஒரு கடல் கொந்தளிப்பிலிருந்து தப்புமா ஏன்பதே பலரிடம் இருந்தும் வெளிப்பட்ட கேள்வியாகும்.

இந்தக் கேள்விகளுக்கு பதில் கூறும் முகமாக, இது குறித்து அணுசக்தித் துறையினரை வெளிப்படையான ஒரு விவாதத்தை நடத்த வேண்டும் என்று மத்திய அரசும் மாநில அரசும் கட்டளையிட வேண்டும் என்பதே இங்குள்ள பெரும்பாலானோரின் கோரிக்கையாக இருக்கிறது.

இந்த வெளிப்படையான விவாதத்தின் அடிப்படையில் இந்த உலைகளுக்கான பாதுகாப்புத் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் என்பதே எம் அனைவரின் வேண்டுகோளாகும்.

PFBR அணுஉலை Coastal Regulation Zone Act மீறிய அமைவிடத்தில் கட்டப்படுகிறது. இந்த அணு உலையைப் பொறுத்தவரை தண்ணீரும், திரவ நிலை சோடியமும் இணைவதற்கான சூழ்நிலைகள் அறவே தவிர்க்கப்பட வேண்டும். அதுபோலவே, அந்த உலையின் மற்ற பகுதிகளில் கூட தண்ணீர் நுழைய வாய்ப்பு ஏற்படும்.

ஏன்றால், அது அந்த அணு உலையை Criticality  என்ற அணுஉலை வெடித்து சிதறுவதற்கான சூழ்நிலைக்குத் தள்ளிவிடக் கூடிய அபாயம் இருக்கிறது.

எனவேதான் ஆரம்பகட்ட கட்டுமானப் பணிகளே தொடஙகப்பட்டிருக்கும் அந்த உலையின் அமைவிடத்தை வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதே சாலச்சிறந்த செயலாக இருக்கும்.

கல்பாக்கம் அணுஉலைகளால் இயற்கை சீற்றங்களைத் தாங்கி பாதுகாப்பாக இயங்கிட முடியுமா என்பது மீதான வெளிப்படையான விவாதத்தை அணுசக்தித் துறை நடத்திட வேண்டும் என்ற கட்டளையை மத்திய அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்பதுவே மத்திய, மாநில அரசுகளுக்கு இங்கு வாழும் மக்கள் அனைவரும் வைக்கும் கோரிக்கையாகும்.

……………………..

குமுதம் பத்திரிகை 14-2-2005 இதழில் “திகில்பாக்கம் – மரணக்குழி” என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரை கீழே:

Advertisements

அணுசக்தியும் தமிழ்நாடு அரசும்


) கூடங்குள அணு உலைகளுக்குத் தமிழ்நாடு அரசு அளித்த அனுமதியில் இருந்து வெளிப்பட்ட விபரீத உண்மை

1988 நவம்பர் 20 ஆம் தேதியன்று சோவியத் அதிபர் திரு.கோர்பச்சேவும் இந்தியப் பிரதமர் திரு.ராஜீவ் காந்தி அவர்களும் கூடங்குள அணுமின் திட்டத்தில் கையெழுத்திட்டனர். தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்த அந்த நாளில் ஆளுனராகப் பதவி வகித்தவர் திரு.பி.சி.அலெக்சாண்டர்.

1989 ஜனவரி 29 இல் தி.மு.. ஆட்சி அமைத்தது. ஆட்சி அமைத்த 18 வது நாளில் அதாவது 16-2-1989 அன்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறை கூடங்குள அணுமின் திட்டத்திற்கான தன் அனுமதியை வழங்கியது. அந்த அனுமதியில் கையொப்பமிட்டவர் தமிழக அரசின் செயலாளராக இருந்த திரு.D.சுந்தரேசன் IAS.

அவர் வழங்கிய அனுமதியானது தமிழக அரசிற்கு அணு உலைகள் குறித்து இருந்த அறிவின்மையையும், அசிரத்தையையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.

இரண்டு 1000 மெகாவாட் வி.வி..ஆர் அணு உலைகளுக்கே அணுசக்தித் துறை அனுமதி கோரியிருந்தது. ஆனால் தமிழக அரசோ எவ்வளவு மெகாவாட் அணு உலைகளுக்கு என்றெல்லாம் குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக அணு உலைகளுக்கு அனுமதியை வழங்குவதாக அறிவித்தது!

ஏழு மாதம் கழித்து தமிழ்நாடு அரசின் செயலாளராக இருந்த திரு.A.S.ஜெயச்சந்திரன் BA அவர்கள் 13.9.1989 ஆம் தேதியிட்ட கடிதத்தில் தமிழ்நாடு அரசிற்கு அணுசக்தி என்றால் என்ன என்றே தெரியாது என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தினார்.

அணு சக்தித் துறை அனுமதி கோரியிருந்த இரண்டு 1000 மெகாவாட் அணு உலைகளுக்குப் பதிலாக அவர் நான்கு 500 மெகாவாட் அணு உலைகளுக்கு அனுமதியை வழங்கிவிட்டிருந்தார்!

அதோடு நிற்கவில்லை! இந்த அனுமதியை தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறையின் தலைவர், கூடங்குளத் திட்டத்திற்கான நிர்வாக இயக்குனர், பாபா அணுசக்தி ஆய்வுக் கழகத்தால் முன்மொழியப்படும் ஒரு உறுப்பினர், மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒரு உறுப்பினர் ஆகியோர்களால் ஆன ஒரு சிறப்புக் குழு பரிசீலிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அடுத்து வந்த காலத்தில் அவரால் கூறிப்பிடப்பட்டிருந்த சிறப்புக்குழுவானது தவறாக அளிக்கப்பட்டிருந்த அந்த அனுமதியை மாற்றியமைக்க எந்த வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை!

கருணாநிதி அரசால் நான்கு 500 மெகாவாட் அணு உலைகளுக்கு வழங்கப் பட்ட தவறான அனுமதியைக் கொண்டே இன்று கூடங்குளத்தில் இரண்டு 1000 மெகாவாட் அணு உலைகளின் கட்டுமானப் பணி தொடர்ந்து கொண்டிருக்கின்றது!

அணு உலைக் கட்டுமானப் பணியினைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டசபையில் சமீபத்தில் நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதா கூட கருணாநிதி அரசால் தவறாகக் கொடுக்கப்பட்ட இந்த அனுமதியை ரத்து செய்ய இன்றுவரை எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை!

) 2001 ஜூலை 28 – கல்பாக்க அணு உலை விபத்திற்கான ஒத்திகையில் கிடைத்த நேரடி அனுபவம்!

2001 மே 21 ஆம் தேதியன்று செல்வி.ஜெயலலிதா இரண்டாவது முறையாக முதல்வரானார்.அவரது அமைச்சரவை பதவியேற்ற 22 வது நாளில் அதாவது ஜூன் 12 ஆம் தேதியன்று கல்பாக்கத்தில் புதிதாக கட்டப்படவிருக்கும் 500 மெகாவாட் திறனுடைய PFBR அணு உலைக்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கான அறிவிப்பு வெளியானது. காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 15 ஆம் தேதியன்று அந்தக் கூட்டம் நடத்தப்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியியலாளர் திரு.கண்ணன் அறிவித்தார்.

1994 ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் சட்டத்தின்படி பொதுமக்கள் கருத்துக் கேட்புக்கூட்டம் நடத்துவதற்கு 30 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையில் Coastal Action Network என்ற தன்னார்வ அமைப்பு இந்த அறிவிப்பினை எதிர்த்து ஜூன் 13 ஆம் தேதியன்று பொதுநல வழக்கு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்தது. ஜூன் 14 ஆம் தேதியன்று இந்த வழக்கினை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், 1994 ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் சட்டத்தைப் பின்பற்றவேண்டும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு உத்தரவிட்டது. இதன் காரணமாக ஜூன் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தினை மாசுக்கட்டுப்பாடு வாரியம் ரத்து செய்யவேண்டி வந்தது. புதிய தேதி ஜூன் 21 ஆம் தேதியன்று அறிவிக்கப் பட்டது. ஜூலை 27 ஆம் தேதியன்று பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்தேறியது.

இந்தக் கூட்டத்தில் (ஒரே ஒருவரைத் தவிர)பேசிய அனைவருமே கல்பாக்கத்தில் புதிய அணு உலையைக் கட்டக் கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்தனர். மக்களின் ஒருமித்த கருத்தைக் கேட்ட அணுசக்தி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது. கூட்டம் முடிவடைந்த பிறகு அணு உலைத் திட்டத்தின் இயக்குனரான திரு.போஜே ஊடகங்களுக்கு ஏதேச்சதிகாரமான பேட்டி ஒன்றினை அளித்தார்.

“ கருத்துக் கேட்புக் கூட்டம் முடிவடைந்திருக்கிறது. மக்கள் பெரிதும் உணர்ச்சிவசப் படுகிறார்கள். தொழில்நுட்பம் தொடர்பான திட்டத்தை வெறும் உணர்ச்சியைக் கொண்டு தீர்மானிக்கக் கூடாது. சுற்றுச்சூழல் அமைச்சகம் மக்களின் உணர்ச்சிகளைக் கருத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது. எது எப்படி இருந்தாலும், அணு உலையின் கட்டுமானப் பணிகள் டிசம்பர் மாதத்தில் தொடங்கும்” என்றார் அதிரடியாக.

அணு உலையைக் கட்ட சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளிக்காவிட்டால்?” என்று ஊடகவியலாளர்கள் கேட்டபோது புன்னகைத்த அவர் “இந்திய நாட்டின் பாதுகாப்போடு தொடர்புடைய திட்டம் ஒன்றை மத்திய அரசால் கைவிட முடியுமா என்ன?” என்று கூறி அவர்களை அதிர்ச்சி அடைய வைத்தார்.

மக்களின் உணர்ச்சிகளைக் கருத்தில் கொள்ள வேண்டுமா கூடாதா என்பதனை அதற்கான குழு தீர்மாணிக்கட்டும்; அணு உலை நிர்வாகத்தினர் இது குறித்து ஊடகங்களில் பேசுவதை வரவேற்க முடியாது�என்று மாவட்ட சுற்றுச்சூழல் பொறியியலாளர் ஜூலை 30 ஆம் தேதியன்று அறிவித்தார்.

மக்கள் தமது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அதனை விவாதப் பொருளாக அணுசக்தித் துறையினர் மாற்றக் கூடாது” என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஷீலா ராணி சுங்கத் கேட்டுக் கொண்டார்.

……………..

வெற்று உணர்ச்சியை நம்பியுள்ள மூடர்களே மக்கள் என்று ஊடகவியலாளர்களிடம் திரு.போஜே கூறியதற்கு அடுத்த நாள் “அணு உலையில் வெடிப்பு ஏற்பட்டால் எவ்வாறு தப்பிப்பது” என்பதற்கான ஒத்திகையை அணுசக்தி நிர்வாகம் கல்பாக்கம் பகுதியில் நடத்தியது. புதிதாகக் கட்டப்படவுள்ள அணு உலைகளுக்கு அனுமதி கோரும்போது அணு உலை விபத்தின்போது மக்களை வெளியேற்றுவதற்கான திட்டத்தினை அணு உலை நிர்வாகம் நடைமுறைப்படுத்தும் ஒத்திகையினை செய்து காண்பிக்க வேண்டும் என்பது 1987 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ள சட்டம்.

ஜூலை 28 காலையில் ஒத்திகை தொடங்கியது. காஞ்சிபுரம் ஆட்சியராக இருந்த திரு.ராஜாராமன், கல்பாக்கத்தில் உள்ள இரண்டு MAPS அணு உலைகளின் தலைவரான திரு.ஹரிஹரன் ஆகியோர் இதற்குத் தலைமை தாங்கினர்.

ஒத்திகைக்கு முன்பாக திரு.ராஜாராமன் கல்பாக்கத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்களை சந்தித்தார். அணு உலைகளுக்கு தெற்கே அமைந்துள்ள மெய்யூர் குப்பம் கிராமத்தில் உள்ள மீனவ மக்களிடம் அவர் பேசும்போது ”அணு உலை நிர்வாகத்தின் நடவடிக்கைகள் சரியில்லை என்று நீங்கள் அனைவரும் கூறுகிறீர்கள். அதற்கான ஆதாரங்களை வைத்திருக்கிறீர்களா? ஆதாரமற்ற புகார்களை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆதாரம் இருக்கும் படசத்தில் கல்பாக்கம் அணு மின் நிலைய நிர்வாகத்துடன் கலந்து பேசி அதற்கான தீர்வை கண்டறிய முடியும்” என்றார்.

அவரிடம் இந்த ஆதாரங்களை மக்கள் சமர்ப்பிக்கும் முன்பாகவே அணுமின் நிலைய நிர்வாகிகள் முந்திக்கொண்டார்கள்.அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே அவரிடம் தம் உண்மை முகத்தை அவர்கள் தாமாகவே முன்வந்து தக்க ஆதாரங்களுடன் வெளிப்படுத்திக் கொண்டார்கள்!

………………………….

அணு உலை விபத்தின்போது அணு உலையை சுற்றிய 16 கிலோ மீட்டர் பகுதியில் வசிக்கும் மக்களை விபத்தினால் ஏற்படும் விளைவுகளில் இருந்து காப்பாற்றும் அரசு சார் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பவர் அந்த மாவட்டத்தின் ஆட்சியரேயாவார். விபத்து குறித்த முதல் செய்தியை அணு உலை நிர்வாகம் அவரிடம்தான் தெரிவிக்க வேண்டும். இதை பிரச்சினைகள் ஏதும் இல்லாமல் நடைமுறைப் படுத்துவதற்காக அவசர கால கட்டுப்பாட்டு மையம் (Emergency Control Center – ECC) என்ற பெயரில் 24 மணி நேரமும் இயங்கும் ஒரு சிறப்பு அலுவலகம் உள்ளது. மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் தெரிவிப்பதற்கான அனைத்து தொலைதொடர்பு கருவிகளும், வரைபடங்களும் அங்குதான் உள்ளன.

கல்பாக்கம் அணுமின் வளாகத்திலிருந்து 16 கிலோமீட்டருக்குள் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேற்றி 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பல்வேறு இடங்களில் தற்காலிகமாகத் தங்கவைப்பதுதான் பாதுகாப்பு நடவடிக்கையின் முதல் கட்டம். அதன்படி 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடப்பாக்கம் கிராமத்தில் உள்ள பி.கிருஷ்ணா அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மக்களையும், அவர்களின் வளர்ப்புப் பிராணிகளையும் கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்களையும், வளர்ப்புப் பிராணிகளையும் சந்திப்பதற்காக திரு.ராஜாராமன் பள்ளி வளாகத்தில் காத்திருந்தார். அவசரகால கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கம்பியில்லா தொலைபேசியின் மூலம் ”விபத்து நடந்துவிட்டது” என்ற செய்திக்காக அவர் காத்திருந்தார்.

ஆனால் அவருக்கு செய்தியேதும் வந்தபாடில்லை!

அவசரகாலக் கட்டுப்பாட்டு மையத்திலிருந்த கம்பியில்லாத் தொலைபேசி அனைத்துமே பழுதாயிருந்தன! திரு.ராஜாராமனிடம் அணுமின் நிலைய அதிகாரிகளால் அளிக்கப்பட்ட கம்பியில்லா தொலைபேசியும் பழுதடைந்த ஒன்றாகவே இருந்தது!

பள்ளி வளாகத்திற்கு வந்து சேரவேண்டிய மக்களும், அவர்தம் வளர்ப்புப் பிராணிகளும்கூட கடைசிவரை வந்து சேரவேயில்லை!

கடைசியில், வேறு வழியின்றி அந்த மக்களை சந்திக்காமலேயே அணு மின்நிலைய நிர்வாகத்தின் திறமை குறித்த தக்க சான்றுகளுடன் திரு.ராஜாராமன் காஞ்சிபுரத்திற்குப் புறப்பட்டு சென்றார்!

) சுனாமியின் போது மூடிக்கிடந்த அவசர கால கட்டுப்பாட்டு மையம்

2004 டிசம்பர் 26 காலையில் சுனாமி தமிழ்நாட்டின் கடற்கரையைத் தாக்கியது. கல்பாக்கம் பகுதியில் சுனாமியால் 60-க்கும் மேலானோர் இறந்து போனார்கள். அதில் 37பேர் அணுசக்தி நகரியத்தைச் சேர்ந்தவர்கள். அதில் 4 பேர் அணுமின் நிலையத்தின் பணியாளர்கள். 33பேர் அணுமின் நிலையப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களாவர்.சுமார் 670 குடும்பங்கள் அவர்களது வீடுகளைக் காலிசெய்துவிட்டு வேறு இடங்களுக்கு செல்லவேண்டியிருந்தது. அணுசக்தி நகரியத்தில் அமைந்திருந்த மருத்துவமனை சுனாமியால் கடுமையான பாதிப்புக்குள்ளாகியது.

சுனாமியால் இரண்டு MAPS அணு உலைகள் பாதிப்புக்குள்ளாகவில்லை. என்றாலும்கூட, புதிதாகக் கட்டப்பட்டு வந்த PFBR அணு உலைக்காகத் தோண்டப்பட்டிருந்த குழியானது சுனாமி அலையால் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது. அந்த அணு உலை ஏற்கனவே கட்டப்பட்டு இயங்கும் நிலையில் இருந்திருந்தால் அது மிகவும் மோசமான அணு உலை விபத்தை உருவாக்கியிருக்கக் கூடும். சுனாமியின் போது இந்த இடத்தில் பணிசெய்துகொண்டிருந்த பீகார் மற்றும் ஒரிசாவைச் சேர்ந்த சுமார் 150 ஒப்பந்தப் பணியாளர்கள் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவசரகால நடவடிக்கையை ஒன்றிணைக்கும் மையமும், அதற்கான அனைத்துக் கருவிகளையும் கொண்டிருக்கும் ”அவசரகாலக் கட்டுப்பாடு மையம்” சுனாமி தினத்தன்றும், அதற்கடுத்துவந்த பல நாட்களிலும் பூட்டப்பட்டு கிடந்தது. சுனாமியால் பாதிக்கப்பட்ட அணுமின்நிலைய மருத்துவமனையில் இருந்து வெளியேறிய நோயாளிகளைத் தங்கவைக்கக் கூட அந்த மையம் திறக்கப்படவில்லை.

சுனாமியால் கல்பாக்கம் அணுமின் வளாகத்திற்கு என்ன ஆயிற்று என்பதை காஞ்சிபுரம் ஆட்சியருக்கு தகவல் தெரிவிப்பதற்காகக்கூட அது திறக்கப்படவில்லை!

செய்தித்தாள்களில் இதுகுறித்த செய்தி வெளியான பின்னரும்கூட காஞ்சிபுரம் ஆட்சியரோ, செல்வி.ஜெயலலிதா தலைமையில் இருந்த அன்றைய தமிழ்நாடு அரசோ மக்களின் வாழ்வைப் பாதிக்கவல்ல அணுமின் நிர்வாகத்தின் அசிரத்தையான இந்த செயல்பாட்டை கேள்விக்குள்ளாக்கவில்லை!

) 2005 ஜனவரி 24 சுனாமி அறிவிப்பும் அவசரகால கட்டுப்பாட்டு மையத்தின் மீழாத் தூக்கமும்

2005 ஜனவரி 24 ஆம் தேதியன்று நிக்கோபார் தீவுகளையடுத்து காலை 9.46 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதனால் சுனாமி வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் சன் செய்திகள் தொலைக்காட்சியானது செய்தியொன்றை வெளியிட்டது. காலை 10 மணிக்கு இந்த செய்தி கல்பாக்கம் அணுசக்தி நகரியத்தில் வெகுவேகமாகப் பரவியது. எனினும் இதுகுறித்து அவசரகாலக் கட்டுப்பாட்டு மையம் எந்தவித தற்காப்பு ந்டவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை.

கல்பாக்கம் அணுசக்தி நகரியத்தில் அணுசக்தி செண்ட்ரல் ஸ்கூல், மற்றும் இரண்டு கேந்திரிய வித்யாலயா என்ற மூன்று பள்ளிக்கூடங்கள் உள்ளன. சுனாமி குறித்த செய்தியை இந்தப் பள்ளிகளின் நிர்வாகங்கள் தெரிந்துகொண்டதும் அவர்களுக்கு முதலில் என்ன செய்வது என்று தெரியவில்லை. பிறகு சுமார் 11 மணியளவில் எல்லா குழந்தைகளையும் உடனடியாக வீட்டிற்கு அனுப்ப முடிவு செய்தார்கள். பள்ளிப் பேருந்துகள் இல்லை. கால் நடையாகவே இந்தக் குழந்தைகள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

வீட்டிற்கு அவர்கள் திரும்பிச் சென்ற சாலையானது தாழ்வான பகுதியில் அமைந்த ஒன்றாகும். 2004 டிசம்பர் 26 சுனாமியின்போது இந்த சாலை சுனாமியின் நேரடியான தாக்குதலுக்கு உள்ளானது. சுனாமி நிகழ்ந்து 30 நாட்கள் முடியாத நிலையில், நகரியத்தில் மட்டுமே சுமார் 37 பேர் உயிரிழந்த நிலையில் குழந்தைகளை பள்ளிக் கட்டிடங்களின் மேல் மாடியில் தங்கவைக்க வேண்டும் என்ற முடிவை பள்ளி நிர்வாகங்கள் எடுக்கவில்லை. மாறாக, அபாயம் மிகுந்த தாழ்வான சாலையில் நடந்து செல்ல குழந்தைகள் பணிக்கப்பட்டார்கள்.

இப்படிப்பட்ட அசம்பாவிதம் நடந்துவிடாமலிருக்க அணு உலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான அதிகாரிகள் நகரிய மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தாதையே இந்த நிகழ்வு வெளிச்சம் போட்டுக் கண்பிக்கிறது. மேலும், இரண்டாவது முறையாக சுனாமி குறித்த செய்தி வந்த உடனேயாவது அவசரகால கட்டுப்பாட்டு மையம் நடவடிக்கையில் இறங்கியிருக்க வேண்டும். ஆனால் இந்த முறையும் அது தன் கடமையிலிருந்து தவறியிருந்தது.

) இருட்டில் வெளிப்பட்ட ஒளியும், இராணுவ அரசியலால் பெறப்பட்ட அனுமதியும்

கல்பாக்கத்தில் கட்டப்பட்டுவரும் PFBR அணு உலைக்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் 2001 ஜூலை 21 ஆம் தேதியன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு முன்பாக ஜூலை 17 ஆம் தேதியன்று “பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கான மருத்துவர் குழு” இந்த அணு உலைக்காக MECON நிறுவனத்தால சமர்ப்பிக்கப்பட்ட “சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை” எவ்வாறு பிழைகள் நிறைந்த அறிக்கையாக உள்ளது என்பதையும், கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் உண்மை நிலை என்ன என்பதையும் விளக்கிடும் ”PFBR – A threat to life” என்ற ஆய்வுப் புத்தகத்தை காஞ்சிபுரம் சுற்றுச்சூழல் பொறியியளாளரான திரு.கண்ணன் அவர்களிடம் சமர்ப்பித்தது.

ஆய்வறிக்கையை பெற்றுக்கொண்ட திரு.கண்ணன் அதனைத் தான் பெற்றுக்கொண்டதாக முறைப்படிக் கையொப்பம் இட்டு ரசீது ஒன்றினை அளித்தார். பின்னர் அந்த ஆய்வறிக்கையை சுமார் ஒரு மணி நேரம் ஆழ்ந்து படித்தார். அதுவரை நாங்கள் காத்திருக்க முடியுமா என்றும் கேட்டுக் கொண்டார்.

ஆய்வறிக்கையைப் படித்து முடித்தபிறகு வேகமாக எழுந்துவந்து எங்களுடன் கைகுலுக்கித் தன் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டிய அவர் கல்பாக்கத்தில் உண்மையில் என்னதான் நடக்கிறது என்பது குறித்து அறிந்துகொள்ள உதவும் சார்புநிலையற்ற ஆவணங்களையோ அல்லது புத்தகங்களையோ படித்ததில்லை என்றும் இதுதான் அது குறித்து அவர் படிக்கும் முதல் புத்தகம் என்றும் எங்களைப் பாராட்டினார். மேலும் அந்தப் புத்தகத்திற்கு வேறு பிரதிகள் உண்டென்றால் அவற்றை பகிர்ந்துகொள்ள இயலுமா என்றும் கேட்டுக் கொண்டார். கூடுதல் பிரதிகளை நாங்களும் அவரிடம் அளித்தோம்.

27 ஆம் தேதியன்று நடந்த பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அவர் மிகவும் நடுநிலையோடு நடந்துகொண்டார். கூட்டத்திற்குப் பிறகு அணு உலையின் தலைவர் ஊடகங்களுக்குத் தன்னிச்சையாகப் பேட்டி அளித்தபோது அந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கள் ”வரவேற்கத்தக்கதல்ல” என்று நாகரீகமாக ஆனால் உறுதிபட அணு உலைத் தலைவரிடம் கூறினார். இதே போன்ற நிலைப்பாட்டையே தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் தலைவராக இருந்த திருமதி.ஷீலா ராணி சுங்கத் அவர்களும் எடுத்தார். அவர்களின் இந்த நிலைப்பாட்டை அணுசக்தித் துறை விரும்பவில்லை.

மத்திய சுற்றச்சூழல் அமைச்சகத்திடம் இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டம் குறித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அளித்த அறிக்கை நடுநிலையானதாக இருந்த காரணத்தாலேயே இந்த அணு உலையின் பணிகள் தாமதமாயின. தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையை உள்ளடக்கிய பல கலந்தாய்வுக் கூட்டங்கள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் நடத்தப்பட்டன.

இந்த கலந்தாய்வுக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு முன்பாக கல்பாக்கம் அணுமின் நிலையம் குறித்து எங்களிடம் உள்ள வேறு ஆய்வறிக்கைகள் மற்றும் தரவுகளைப் பகிர்ந்து கொள்ள இயலுமா என்று திருமதி.ஷீலா ராணி சுங்கத் அவர்கள் திரு.கண்ணன் மூலமாக வாய்மொழியாக கேட்டுக் கொண்டார். நாங்களும் எங்களிடம் இருந்த அனைத்துத் தரவுகளையும் அவரிடம் பகிர்ந்து கொண்டோம்.

அணு உலைக்கு அடுத்த 40 ஆண்டுகளுக்குத் தேவையான தண்ணீர் குறித்த ஆய்வு, சுமார் 25 ஆண்டுகளாகக் கல்பாக்கத்தில் இயங்கிவரும் இரண்டு அணு உலைகளால் ஏற்பட்டுள்ள நோய்கள் குறித்த ஆய்வு, கல்பாக்கம் கடற்கரையின் தன்மை குறித்த ஆய்வு, கல்பாக்கத்தில் பூகம்பம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறித்த ஆய்வு ஆகியவற்றை மேற்கொள்ளாமலேயே இந்த அணு உலையைக் கட்டுவதற்கான அனுமதியை அணுசக்தித் துறை கேட்டுள்ளது விவாதப் பொருளாக மாறியது. மேலும் அணு உலை விபத்து ஏற்பட்டால் அதனை கைகொள்வதற்கான திறனற்ற நிலை குறித்தும் விவாதங்கள் மேலெழும்பின.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையால் முன்வைக்கப்பட்ட இந்த வாதங்களால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாகவே அணு உலையின் பாதுகாப்புடன் தொடர்புடைய மேற்கூறிய ஆய்வுகளையும், திறனையும் முறைப்படி நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அதன்பிறகே அணு உலைக்கான அனுமதி அளிக்க முடியும் என்ற முடிவை வேறு வழியின்றி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அணு சக்தித் துறையிடம் தெரிவிக்க வேண்டி வந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகும் என்று அணு உலை நிர்வாகிகள் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. எதேச்சதிகாரமாக ஊடகங்களில் பேட்டி அளித்த திரு.போஜே,திட்டத்தின் தன்மை குறித்து “கரண்ட் சயின்ஸ்” போன்ற அறிவியல் சஞ்சிகைகளில் எழுத நிர்ப்பந்திக்கப்பட்டார். ஆனால் அவரது கட்டுரை நடுநிலையான விஞ்ஞானிகள் வெகுவாகக் கலந்து கொண்ட அவருக்கு சாதகமில்லாத ஆனால் செழுமையான விவாதம் ஒன்றை அந்த சஞ்சிகையில் ஏற்படுத்தியது.

2001 ஆம் ஆண்டின் இறுதியில் கிடைத்திருக்க வேண்டிய PFBR அணு உலைக் கட்டுமானப் பணிகளுக்கான அனுமதி 2002மே 24 ஆம் தேதிவரை கிடைக்கவில்லை.

இவ்வாறு அனுமதி தள்ளிப்போய்க்கொண்டேயிருந்த சூழ்நிலையில், மே 24 ஆம் தேதியன்று பாகிஸ்தான் நாட்டில் நடந்த ஒரு நிகழ்வானது அந்தத் திட்டத்திற்கு அனுமதியை அதிரடியாக வாங்கிக் கொடுத்தது!


ஹியர் இஸ் த மேப் !


திரு.அகர்வால் அவர்களும், மற்ற அதிகாரிகளும் சபையை விட்டு திடீரென்று வெளியேறியது எங்கள் அனைவரையும் வெகுவாக சங்கடப்படுத்தியது.

கருத்தரங்கு முடிந்தவுடன் மறுநாள் கூடங்குளம் சென்று திரு.அகர்வால் அவர்களை சந்திப்பது என்று முடிவெடுத்தோம். அடுத்த நாள் காலை கேப்டன்.புத்திகோட்ட சுப்பாராவ் தலைமையில் டாக்டர் லால் மோகன், உதயகுமார், டாக்டர் சத்தியநேசன், நான் மற்றும் சிலர் அக்ர்வாலைப் பார்க்கப் புறப்பட்டோம்.

எங்கள் அனைவரையும் திரு.அகர்வால் இன்முகத்துடன் வரவேற்றார். முந்தைய நாளின் கோபம் அவரது முகத்தில் இல்லை.

வாருங்கள்! ஐ ஆம் அட் யுவர் சர்வீஸ்!” என்றார்.

முதலில் தேநீர் அருந்துவோம்” என்று கூறினார். வேலைகாரருக்குக் காத்திருக்காமல் அவரே தேநீரைக் கோப்பைகளில் ஊற்றி அனைவருக்கும் கொடுத்தார்.

தேநீரைப் பருகிக்கொண்டிருக்கும்போது அணு உலை வளாகத்தில் நுழைந்ததும் கண்ட படிமங்கள் மனதில் நிழலாடின. வழியெல்லாம் பணி ஆட்கள். அணு உலை வளாகத்தின் சாலையில் வரும்போதே தூரத்தில் முதலாம் அணு உலைக்கான ராட்சதக் குழி தோண்டப்படுவதைக் காண முடிந்தது. பலநூறு லாரிகள் தூரத்தில் தீப்பெட்டி அளவில் இங்கும் அங்கும் சென்று கொண்டிருந்தன.

தேநீரை அருந்தி முடிந்ததும் ”முதலாம் அணு உலைக்கான குழியைப் போய்ப் பார்ப்போமா?” என்றார் அகர்வால். எங்கள் வருகைக்குக் காத்திருக்காமல் அங்கு எங்களை அழைத்துச் செல்வதற்கு பெம்போ டிராவல்லர் வேனை வரவழைத்தார்.

குழியின் பிரமாண்டத்தைப் பார்த்து நான் மிரண்டுதான் போனேன். குழியின் ஆழத்தில் பல லாரிகளும், பொக்லீன் மெஷின்களும் சுண்டைக்காய் சைசில் தெரிந்தன.

இந்தப் பிரமாண்டங்களின் பின்புலத்தில் உள்ள திரு.அகர்வால் என் கண்களுக்கு இப்போது வேறு மனிதராகத் தென்பட்டார். இந்த பிரமாண்டங்களுக்கு சொந்தக்காரர், இதோ ஒன்றும் அறியாதவர்போல புன்முறுவலுடன் டாக்டர்.லால் மோகனுடன் பேசிக்கொண்டிருக்கிறார். இவரையா நாம் நேற்று கேள்விகளால் சங்கடப் படுத்தினோம்?

கடலில் இருந்து காற்று மேற்கு நோக்கி விர்ரென்று வீசத் தொடங்கியிருந்தது.

குழியின் கீழே உள்ள பாறையானது ஒரே வகை கடினப் பாறையா? அல்லது வேறு வகைப் பாறைகள் இடை இடையில் உள்ளனவா?” என்று நான் கேட்டேன்.

இதுவரை புன்முறுவலால் மலர்ந்திருந்த அவரது முகம் திடீரென்று இறுகியது.

சந்தேகம். சந்தேகம். எல்லாவற்றிலும் சந்தேகம். நீங்கள் என்ன கடினப் பாறை நிலவியலாளரா?” என்றார்.

இல்லை. நான் ஒரு மருத்துவர்” என்றேன்.

அப்படியென்றால் நிலவியல் சந்தேகத்தை ஏன் கேட்கிறீர்கள்?” என்றார்.

கூடங்குளத்தின் நிலவியல் மற்றும் பூகம்பவியல் பற்றி சென்ற மாதம் இவர் ஒரு ஆய்வுப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். அந்த ஆர்வத்தில்தான் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்” என்றார் டாக்டர் சத்தியநேசன்.

எல்லாம் கடினப் பாறைதான். மென்மையான் பாறை இங்கு இல்லை” என்றார் தீர்க்கமாக.

1997 ஆம் ஆண்டின் இறுதியில் கூடங்குள அணுமின் வளாகத்தின் நிலவியலை திருவனந்தபுரத்தில் உள்ள யுனிவர்சிட்டி கல்லூரியின் நிலவியல் துறையை சேர்ந்த டாக்டர் பிஜூ மற்றும் பேராசிரியர் ராம சர்மா ஆகியோர் ஆய்வுக்குள்ளாக்கினர். அப்போது இந்தப்பகுதியில் பெருவாரியாக இருக்கும் கடினப் பாறையின் ஊடாக 10 செமீ – 3 மீட்டர் அகலத்தில் சுமார் 200 மீட்டர் நீளத்தில் அமைந்திருந்த 14 மென்மையான பாறைக் கீற்றுகள் உள்ளன என்பதை அவர்கள் கண்டறிந்தனர்.”

இந்த மென்மையான பாறைக் கீற்றுகளை நில மேலோட்டின் வலுவற்ற பகுதிகள் என்பதை நாம் குறித்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்த மென்மையான பாறைக் கீற்றுகள் நில மேலோட்டிற்கு 30 கிலோ மீட்டருக்குக் கீழ் உள்ள திரவமான மேக்மா மேலெழுந்து உறைந்துபோனதால் உண்டானவை என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். இந்தப் பகுதியில் நிகழ உள்ள ஒவ்வொரு சிறு நில அதிர்வும் இந்த மென்மைப் பாறைக் கீற்றுகளின் வலுவினை எவ்வாறு பாதிக்கும் என்பதற்கான ஆய்வுகளை அணு உலைகளைக் கட்டுவதற்கு முன்பாக நாம் முன்னெடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்” என்றேன்.

அப்படியென்றால் நான் சொல்வதை நீங்கள் நம்பவில்லையா? நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்” என்று தடாலடியாக அந்தப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

இருந்தாலும் உரையாடலைத் தொடர்ந்தேன்.

அணுமின் நிலையப் பணியாளர்களின் நகரத்தை அமைப்பதற்கு செட்டிகுளத்திற்கும் பெருமணலுக்கும் இடையில் உள்ள பகுதியை நிர்வாகம் தேர்வு செய்தற்கான காரணம் என்ன?” என்றேன்.

கூடங்குளத்திற்குத் தெற்கேயும், நாகர்கோவிலுக்கு அருகிலும் உள்ளதால்தான்” என்றார்.

ஆனால் பெருமணலை அடுத்து அது அமைந்துள்ளதே! அதைக் கவனிக்கவில்லையா?” என்றேன்.

பெருமணலை அடுத்து இருந்தால் என்ன? தவறா?” என்றார் அப்பாவியாக.

ஆமாம். தவறில் போய் முடிவதற்கான வாய்ப்புகள் அதிகம். பெருமணல் என்பது இந்தப் பகுதியின் மிகவும் அகலமான கடற்கரை ஊள்ள கிராமம்.”

பருவகால மாற்றத்திற்கு ஏற்ப வடக்கு நோக்கியும், தெற்கு நோக்கியும் மாறி மாறி ஓடுகின்ற கடற்கரை நீரோட்டமானது கடற்கரைகளிலும், அவற்றை ஒட்டியும் மணலைப் படிய வைக்கின்றன; அல்லது அரிப்புக்குள்ளாக்குகின்றன.பெருமணலின் கடலோர வடிவமைப்பானது இந்த நீரோட்டங்களால் அள்ளிவ்ரப்படும் மணலை அதனகத்தே படிய வைப்பதாக அமைந்துள்ளது.”

இந்த இரண்டு அணு உலைகளின் குளிர்விப்பான் குழாய்களுக்குள் கடல் உயிரினங்கள் புகுந்து அடைப்பேற்படுத்தாமல் இருக்க ஒவ்வொரு நாளும் சுமார் 10 டன் சோடியம் ஹைப்போ குளோரைட் வேதிமப் பொருளைக் கடல் நீரில் கலக்கப் போகிறீர்கள். இந்த வேதிமப் பொருள் கடல் உயிரிகளை அழிப்பதோடு நிற்காமல் மனிதர்களுக்கு புற்று நோயை உருவாக்கவல்ல ட்ரை ஹேலோ மீத்தேன் என்ற வேதிமப் பொருளாகவும் மாறும்.”

செப்டம்பர் மாதத்திலிருந்து டிசம்பர் வரை உள்ள தெற்கு நோக்கிய கடற்கரை நீரோட்டமானது இந்த வேதிமப் பொருட்களை அதிக அளவில் பெருமணல் கடற்கரையின் மீது படியச் செய்யும். பெருமணலை அடுத்துள்ள கடல்பரப்பில்தான் அணு விஜய் நகரியத்திற்கான கடல்நீரிலிருந்து நன்னீரை உற்பத்தி செய்கின்ற உப்பகற்றி ஆலையை நிறுவியுள்ளீர்கள். எனவே இந்த உப்பகற்றி ஆலை உற்பத்தி செய்யும் நீரில் பெருமளவிலான ட்ரை ஹேலோ மீத்தேன் கலப்பதற்கான அனைத்து வாய்ப்பும் இருக்கிறது. மேலும் கூடங்குள அணு உலைகளில் இருந்து கடலில் வெளியேற்றப்படவுள்ள குறைந்த அளவு கதிரியக்கக் கழிவுகளும் இந்த உப்பகற்றி ஆலையின் நீரில் வெளிப்படுவதற்கான சாத்தியமும் உள்ளது,”

இந்த நீரை உபயோகிக்கும் அணு உலைப் பணியாளர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் அதிக அளவிலான குடல் மற்றும் சிறுநீரகப் புற்றுநோய்கள் உருவாவதற்கான சாத்தியம் இருக்கிறது.”

இதனைத் தவிர்க்க என்ன செய்யப்போகிறீர்கள்?” என்றேன்.

பிரமாதமாகத்தான் கற்பனை செய்கிறீர்கள்!” என்றவர், “சரி! நாம் அலுவலகத்திற்குப் போவோம்” என்று வேனைப் பார்த்து நடக்கத் தொடங்கி விட்டார். வேறு வழியின்றி நாங்களும் அவரைப் பின் தொடர்ந்தோம்.

அலுவலகத்தை அடைந்ததும் “சரி ஜெண்டில்மென்! வேறு ஏதும் கேள்விகள் இருக்கிறதா?” என்றார்.

ஒரு கேள்வி” என்றார் டாக்டர் சத்தியநேசன்.

சரி, கேளுங்கள் என்றார்” அகர்வால்.

எரிந்து முடிந்த எரிபொருளை வைத்திருக்கப் போகும் குளிர்விப்பான் குளம் வரவிருக்கும் இடம் எது?” என்றார்.

அகர்வாலின் முகம் பிரகாசித்தது. “அதோ அங்கே!: என்று ஒரு பகுதியைக் காண்பித்தார்.

பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை. “ஒரு நிமிடம்!” என்று கூறிவிட்டு ஒரு அறைக்குள் சென்றார். அதுத்த சில நிமிடங்களில் உருளையாக சுற்றப்பட்ட சுமார் இரண்டு மீட்டர் உயரமுள்ள மிகப் பெரிய தடிமனான பேப்பர் ஒன்றோடு வெளியில் வந்தார்.

யெஸ் ஜெண்டில்மென்! ஹியர் இஸ் த மேப்” என்று கூறிக்கொண்டே அதை அலுவலகத் தரையில் விரித்தார். அது கூடங்குள மின் நிலையத்தின் வரைபடம் என்பதை அறிந்து கொண்டோம்.

வரைபடத்தில் உள்ள பகுதிகளைக் காண்பிக்க உதவும் பாய்ண்டர் குச்சியை அவரது உதவியாளர் கொண்டுவந்து கொடுத்தார்.

டெம்பெரரி ஸ்பெண்ட் பியூயல் ஸ்டோரேஜ் ஏரியா” எங்கிருக்கிறது என்பதை வரைபடத்தில் காண்பிபிபீர்களா?” என்றார் சத்தியநேசன்.

அகர்வால் ஒரு நிமிடம் குழம்பியது போல் தெரிந்தது. ”ஒரு நிமிடம்” என்றார். வரைபடத்தின் மீது குனிந்து உற்று நோக்கினார். நேரம் ஓடிக் கொண்டேயிருந்தது.

திடீரென்று எழுந்தார். அவஸ்தையுடன் சத்தியநேசனைப் பார்த்தார்.

சாரி ஜெண்டில்மேன்! ஐ காண்ட் ஆன்சர் யூ நௌ! ஐ வில் டெல் யூ லேட்டர்” என்றார்.

ஏன்?” என்றார் சத்தியநேசன்.

ஏனென்றால் இந்த வரைபடம் ரஷ்ய மொழியில் இருக்கிறது!” என்றார் அதிரடியாக!

அத்துடன் எங்கள் கூடங்குள மின் நிலையப் பயணம் நிறைவு பெற்றது.

……………………  காட்டுகிறேன்! ஆனால் கொடுக்க முடியாது!


பிப்ரவரி 28 ஆம் தேதி டாக்டர்.லால் மோகன் அவர்களால் நாகர்கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் சுப.உதயகுமார் திரு.அகர்வாலிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார்.

பள்ளி-கல்லூரி மாணவ மாணவிகளுக்கும், பொது மக்களுக்கும் முன்பாக வைக்கப்பட்ட அந்தக் கோரிக்கைக்கு திரு.அகர்வால் அவர்கள் அளித்த பதிலே அணுசக்தித்துறையின் மீது நெல்லை-குமரி மக்களும், மாணவர்களும் கொண்டிருந்த நன்மதிப்பு தடாலென்று சரிந்து விழுவதற்கான அடிப்படைக் காரணமாக அமைந்தது.

“திரு.அகர்வால் அவர்களே! கூடங்குள அணுமின்நிலையம் பாதுகாப்பான ஒன்று என்று கூறுகிறீர்கள். எமக்கும் அது அவ்வாறாக இருக்க வேண்டும் என்பதுதான் விருப்பம். ஆனாலும் அது பாதுகாப்பானதுதான் என்பதை உறுதிப்படுத்தும் அனைத்து ஆய்வுகளையும் எங்களிடம் நீங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் அணுசக்தித் துறையால் மற்ற அணு உலைகளுக்காக முன்வைக்கப்பட்ட ஆய்வறிக்கைகள் அறிவியல் அடிப்படையில் பிழைபட்டவையாக இருப்பதை நாங்கள் சமீபத்தில் நேரடியாகவே கண்டிருக்கிறோம்.”

“கல்பாக்கத்தில் புதிதாகக் கட்டப்படப்போகிற அணு உலை ஒன்றிற்கான மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை காஞ்சிபுரத்தில் 2001 ஜூலை 27 ஆம் தேதியன்று அரசு நடத்தியது. அந்த அணு உலைக்கான ”சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த அறிக்கை” மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என்று அணுசக்தித் துறைக்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் ஆணை பிறப்பித்திருந்தது. அந்த ஆய்வறிக்கையை நாங்கள் ஆழமாகப் படித்தோம். அதில் அணு உலையின் பாதுகாப்பைக் குலைக்கக் கூடிய பல்வேறு அடிப்படைத் தவறுகள் இருப்பதைக் கண்டறிந்தோம். இதற்காக நாங்கள் திரட்டிய அனைத்து அறிவியல் சான்றுகளையும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் வழங்கினோம். எங்கள் சான்றுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவற்றின் அடிப்படையில் அந்த அணு உலையின் கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. உலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான கூடுதல் ஆய்வுகளை நடத்திடுமாறு அணுசக்த்தித் துறைக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ”

“கூடங்குளத்தில் அணு உலைகளுக்கான கட்டுமானப் பணியை அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக அறிகிறோம். கல்பாக்கத்தில் கட்டப்படவுள்ள அணு உலையைக் காட்டிலும் இவை மூன்று மடங்கு பெரியவை. ஆனாலும் கூட இந்த அணு உலைகளுக்கான மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட மாட்டாது என்றும், அவற்றிற்கான ”சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த அறிக்கை” மக்களிடம் அளிக்கப்படமாட்டாது என்றும் அணுசக்தித் துறை கூறுகிறது. கல்பாக்கம் அறிக்கையில் உள்ள அடிப்படைப் பிழைகளைப் போன்று இந்த அறிக்கையிலும் பிழைகள் இருக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?”

“எனவே எங்களுக்கு அந்த அறிக்கையையும், பிற அறிக்கைகளையும் கொடுப்பீர்களா? மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்துவீர்களா?”

உதயகுமாரின் கேள்விகளைக் கேட்டவுடன் திரு.அகர்வால் அவர்களின் முகம் மாறிப்போனது. கடுமையான அதிகாரத் தொனியில் அவற்றிற்கு பதிலளிக்கத் தொடங்கினார்:

“அணு உலைகளை நிறுவ வேண்டும் என்றால் “சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த அறிக்கை” சமர்ப்பித்தாக வேண்டும் என்றும் இது குறித்து “மக்கள் கருத்துக் கேட்புக் கூடம்” நடத்தப்பட்டாக வேண்டும் என்றும் மத்திய அரசு 1994 ஆம் ஆண்டிலதான் அரசாணை கொண்டு வந்தது.”

“கூடங்குளத்தில் கட்டப்படவுள்ள இரண்டு அணு உலைகளுக்கான இந்திய – ரஷ்ய ஒப்பந்தம் 1988 ஆம் ஆண்டே கையெழுத்தாகி விட்டது. அதற்கான அனுமதியைத் தமிழ்நாடு அரசும், அணுசக்திக் கட்டுப்பாடு ஆணையமும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் 1989 ஆம் ஆண்டிலேயே கொடுத்து விட்டன. எனவே சட்டப்படி, மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்த வேண்டிய அவசியமில்லை. அதுபோலவே,சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த அறிக்கையையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் எங்களுக்கு இல்லை.”

“இது அநியாயமில்லையா?” என்று பார்வையாள்ர் கூட்டத்திலிருந்து கேள்வி எழும்பியது.

“உண்மையை உங்களுக்கு சாதகமாக திரித்துக் கூறுகிறீர்கள் திரு.அகர்வால் அவர்களே!” என்று டாக்டர்.லால் மோகன் பேச ஆரம்பித்தார்.

“1989 ஆம் ஆண்டு இந்த இரண்டு அணு உலைகளுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டது என்பது உண்மைதான். ஆனால் 1990 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யா பிளவுபட்டும் போனது. அதன்பின் இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்தத் திட்டம் குறித்து மறுபடியும் பேச்சுவார்த்தை 1996 ஆம் ஆண்டில்தான் தொடங்கியது. இதன் காரணமாக், 1997 மார்ச் மாதம் புதியதொரு ஒப்பந்தம் கையெழுத்தானது.”

“1997 ஆம் ஆண்டின் ஒப்பந்தம் 1988 ஒப்பந்தத்திலிருந்து நான்கு விடயங்களில் மாறுபட்டிருந்தது. அதில் மிகவும் முக்கியமானது கதிரியக்கம் கொண்ட யுரேனிய எரிபொருள் பற்றியதாகும். கதிரியக்கம் கொண்ட “உபயோகித்து முடிந்த யுரேனிய எரிபொருளை” முந்தைய ஒப்பந்தத்தின்படி ரஷ்யாவே திரும்ப எடுத்துக் கொள்ளும். ஆனால் 1997 ஆம் ஆண்டின் ஒப்பந்ததின்படி அதனை கூடங்குள வளாகத்தில் நாமே பராமரித்தாக வேண்டும்.”

திரு.அகர்வால் நெளிந்தார். முறைத்தார்.

“கூடங்குள வளாகத்தில் அதனைப் பராமரிப்பது என்பது சாதாரண காரியம் இல்லை”, டாக்டர்.சத்தியநேசன் பேசத் தொடங்கினார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறைப் பேராசிரியராக இருந்து விட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர் அவர். தற்போது சொந்த ஊரான முட்டத்தில் வசித்து வருபவர்.

“ஒவ்வொரு ஆண்டும் இந்த இரண்டு அணு உலைகளுக்கு 50 டன் யுரேனியம் தேவைப்படும். ஆக, அணு உலைகளின் வாழ்க்கைக் காலமான 40 வருடங்களில் 2000 டன் அளவிலான கதிரியக்கக் கழிவுகள் கூடங்குள வளாகத்தில் குவிந்திருக்கும்.”

”கடந்த 40 வருடங்களில் இந்தியா முழுவதிலும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அனைத்து அணு உலைகளிலும் சுமார் 4000 டன் கதிரியக்க எரிந்து முடிந்த எரிபொருள்தான் வெளியேறியிருக்கிறது.”

“இந்தத் தகவலை மனதில் கொண்டால் 1988 ஒப்பந்தத்துக்கும், 1997 ஒப்பந்தத்துக்கும் உள்ள முக்கிய வேறுபாட்டைப் புரிந்து கொள்ள முடியும். பழைய ஒப்பந்தத்தின்படி இந்த 2000 டன் கதிரியக்கக் கழிவுகளை ரஷ்யாவே திரும்பி எடுத்துக் கொள்ளும். ஆனால், புதிய ஒப்பந்தத்தின்படி அவை கூடங்குள வளாகத்திற்குள்ளேயே காலத்திற்கும் இருந்தாக வேண்டும்.”

“இப்படிப்பட்ட மாறுபட்ட சூழ்நிலையைத்தான் புதிய ஒப்பந்தம் உருவாக்கியுள்ளது. எனவே, புதிய ஆய்வுகள் அவசியமாகின்றன. பழைய அனுமதிகள் பொருந்தாது. புதிய அனுமதிகள் தேவை. புதிய ஒப்பந்தம்1997 இல் கையெழுத்தாகியிருக்கிறபடியால் புதிய சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையும், மக்கள் கருத்து கேட்புக் கூட்டமும் அவசியமாகிறது” என்று முடித்தார்.

இருக்கையிலிருந்து எழுந்தார் திரு.அகர்வால். “அதை நீங்கள் அரசிடம் சொல்லுங்கள். கோர்ட்டில் முறையிடுங்கள். என்னிடமல்ல” என்றார் எரிச்சலுடன். மேடையை விட்டு கீழே இறங்கத் தொடங்கினார்.

விவாதத்தைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த மக்களும், மாணவர்களும் அவர் மேடையை விட்டு வெளியேறுவதைப் பார்த்து ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்துதான் போனார்கள்.

கீழே பார்வையாளர்கள் மத்தியில் நின்றுகொண்டிருந்த பத்திரிகையாளர் ஒருவர் ஓடி வந்து அவரை சமாதானப் படுத்த முயன்றார்.

“தனிப்பட்ட முறையில் உங்களை யாரும் குற்றம் சொல்லவில்லை சார். அதனால் நீங்கள் தயவு செய்து கோபம் கொள்ள வேண்டாம்” என்றார்.

“எனக்கு மிக முக்கியமான வேலை உள்ளது. அதனால்தான் கிளம்பி விட்டேன். கோபத்தினால் அல்ல” என்று அகர்வால் பதில் கூறினார்.

அப்போது பார்வையாளர் மத்தியில் இருந்து ஒரு கல்லூரி மாணவி கேட்டாள்:

“சட்டம் இருக்கட்டும் ஐயா! அணு உலை பாதுகாப்பு குறித்து உங்களிடம் உள்ள அறிக்கைகளை எங்களிடம் பகிர்ந்து கொள்வீர்களா?”

“இந்தக் கருத்தரங்கில் உள்ள எவரும் நாளை காலை 10 மணிக்கு என் கூடங்குள அலுவலகத்திற்கு வரலாம். இது குறித்து என்னிடம் சகல அறிக்கைகளும் இருக்கின்றன என்பதைக் காட்டுகிறேன். ஆனால்,அவற்றை உங்களிடம் கொடுக்க முடியாது” என்று சொல்லிக்கொண்டே அவரும், அவரது சக அதிகாரிகளும் கருத்தரங்கைவிட்டு வெளியே சென்று விட்டனர்.

அவர்கள் சபையை விட்டு வெளியேறிய அந்தக் கனம்தான்…

… இன்று ஆல மரமாகத் தமிழகம் முழுவதும் கிளைவிட்டு வளர்ந்து நிற்கின்ற கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த அச்சமும், வெறுப்பும் அனைவரின் மனதிலும் ஆழமாக வேரூன்றத் தொடங்கிய கனமாகும்.


தன்னையே அணுக்கதிருக்கு ஈந்த கூடங்குள அணு மூலவர்?


திரு.எஸ்.கே.அகர்வால்!

அவரை நினைத்தால் இன்றும் மனம் கனக்கிறது. கலங்குகிறது.

1990-களின் இறுதியில் அணுமின் திட்டத்தின் முதன்மைப் பொறியாளராக கூடங்குளம் வந்த அவர் பிறகு இந்திய அணுசக்திக் கட்டுமாமனக் கழகத்தின் (இறக்குமதி செய்யப்படும்) அனைத்துக் கடலோர அணுமின் திட்டங்களின் இயக்குனராகப் பதவி உயர்வு பெற்றார். கூடங்குளத் திட்டத்தினை ஒட்டி பலமுறை ரஷ்யா சென்று வந்தார். ”பாதுகாப்புக்கு விடுமுறை கிடையாது” என்பது அவர் அடிக்கடி உதிர்க்கும் பொன்மொழி. அணுசக்திக் கட்டுமானக் கழ்கத்தின் 2003 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு செம்மல் விருதால் கௌரவிக்கப்பட்டார்.

நெல்லைகுமரி மாவட்ட ஊடகவியலாளர்கள் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு அவர்களுடன் “நெருங்கிப்” பழகினார்ர். இந்து மற்றும் பிரண்ட்லைன் பத்திரிகையின் முதன்மை நிருபரான டி.எஸ்.சுப்பிரமணியத்துடன் நகமும் சதையுமாக இருந்தார்.

அவரை சந்திப்பதற்கான வாய்ப்பு எங்களுக்கு 2002 பிப்ரவரி 28 ஆம் தேதியன்று கிடைத்தது. நாகர்கோவிலைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானியான டாக்டர் லால் மோகன் அவர்கள் ”கதிர்வீச்சால் வரும் சுகாதாரக் கேடுகள்” என்ற தலைப்பில் அன்றைய தினம் ஒரு முழு நாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தார். அந்தக் கருத்தரங்கிற்கு திரு.எஸ்.கே.அகர்வாலும் பேச அழைக்கப் பட்டிருந்தார்.ஏராளமான பொது மக்களும், பள்ளிகல்லூரி மாணவர்களும் வந்திருந்தார்கள்.

கருத்தரங்கின் தலைப்பு “கதிர்வீச்சால் வரும் சுகாதாரக் கேடுகள்” என்றாலும் கூட அன்று நடைபெற்றதென்னவோ கூடங்குளம் அணுமின்நிலையத்தின் பாதுகாப்பு குறித்து அணு உலை அதிகாரிகளுடன் நடந்த மிக ஆழமான விவாதம்தான்.

அதன்பிறகு, இன்றுவரை அதுபோன்ற விவாதத்தில் அணுசக்தி அதிகாரிகள் மறந்தும் கலந்துகொள்வதில்லை.

பேச அழைக்கப்பட்டவுடன் மிடுக்காக நடந்து வந்து மைக்கைப் பிடித்தார் திரு.அகர்வால். அனைவரையும் முதல் நிமிடத்திலேயே கதிகலங்க வைத்தார்.

“இங்க யார் யார் செல்போன் வச்சிருக்கீங்க கை தூக்குங்க பார்ப்போம்” என்றார் ஆங்கிலத்தில்.நிறையப் பேர் கை தூக்கினோம்.

“போனை எங்க வச்சிருக்கீங்க? எத்தனைப் பேர் சட்டையின் இடது பாக்கெட்டில் அது இருக்கு?” என்று ஒரு போடு போட்டார். அனேகமாக அனைவரும் அவரவர் இடது சட்டைப்பையைத் தடவிப் பார்த்தோம்.

அடுத்து உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். “நண்பர்களே! தயவு செய்து செல்போனை சட்டையின் இடது பாக்கெட்டிலும், பேண்ட் பாக்கெட்டுகளிலும் (?) வைக்காதீர்கள். சட்டையில் வைத்தால் அதில் இருந்து வெளியேறும் கதிரியக்கம் நம் இருதயத்தை வெகுவாகப் பாதித்து விடும். பேண்ட் பாக்கெட்டில் வைத்தால் என்ன நடக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள். ஆகவேதான் சிரமம்தான் என்றாலும்கூட அதனை கையில் பிடித்துக் கொள்வதே சாலச் சிறந்தது!” என்று சொல்லிவிட்டு சிறிது நேரம் அனைவரையும் பார்த்தார் மௌனமாக.

அவர் சொன்னதைக் கேட்ட மறு விநாடியே அனைவரின் செல்போன்களும் அவரவர் கைகளில் அனிச்சையாக வந்து விழுந்தன்.அதன் பிறகு புன்முறுவல் பூத்த அவர் கூறினார்: “நண்பர்களே! கூடங்குளம் அணுமின் நிலையம் நம் செல்போன்களைக் காட்டிலும் பாதுகாப்பானது. எனவே தைரியமாயிருங்கள்!”

”குஜராத்திலிருக்கும் கக்ராபார், உத்தர் பிரதேஷில் இருக்கும் நரோரா ஆகிய அணு உலைகளில் நான் வேலை செய்திருக்கிறேன். என்னைப் பார்த்தால் புற்று நோய் பிடித்தவன் மாதிரியா இருக்கிறது?” என்று கூறிவிட்டு தன் உடல் நலனைக் வெளிக் காட்டும் விதமாகத் தன் இரு புஜங்களையும் மடக்கிக் காண்பித்தார்.

சபையே கைதட்டலில் அதிர்ந்தது.

………………….

”அணுசக்தி குறித்து கவலைப்படக் கூடாது! தைரியமாயிருக்க வேண்டும்!!” என்றும், “பாதுகாப்புக்கு விடுமுறை கிடையாது” என்றும் திரு.அகர்வால் கூறியதை அணு உலையில் பணியாற்றியிருக்காத எங்கள் மனங்கள் வேடிக்கையாகவே எடுத்துக்கொண்டன…..சுமார் ஆறு வருடம் கழித்து அந்த செய்தியைப் படிக்கும் வரை!

2008 ஜனவரி 6 ஆம் தேதியன்று இரவு திரு.அகர்வால் அகால மரணமடைந்திருந்தார். அப்போது அவருக்கு வயது 55!

சாதாரண இந்தியக் குடிமகன் ஒருவரே 60 வயதுக்கும் மேலாக வாழத்தொடங்கியிருக்கும் இன்றைய “வளர்ந்த” சூழலில், சாதாரண மக்களால் எட்ட முடியாத இடத்தை எட்டிப்பிடித்திருந்த திரு.அகர்வால் வெறும் 55 வயதிலேயே மரணம் அடைந்தது எப்படி? நவீன மருத்துவத்தால் அவரை ஏன் காப்பாற்ற முடியவில்லை?

பல்வேறு உறுப்புகள் திடீரென்று செயலிழந்து போனதால் மரணம் சம்பவித்தது என்றது செய்தி. மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அட்மிட் செய்யப்பட்ட அவர் ஞாயிற்ன்று இறந்து போயிருந்தார்.

திரு.அகர்வால் அவர்களின் பல்வேறு உறுப்புகள் செயலிழந்து போனதை சாத்தியப்படுத்திய நோய் எது என்பதை செய்திகள் சொல்லவில்லை. புற்றுநோய்தான் காரணம் என்றும், நரோரா அணுமின் நிலையமே அவருக்கு அதனைக் கொடுத்தது என்றும் உறுதிப்படுத்த முடியாத செய்திகளை நாங்கள் பிறகு கேள்விப் பட்டோம்.

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணிபுரியும் பல்ருக்கும், அதனை சுற்றிவசிக்கும் மக்களில் பலருக்கும் எலும்பு மஜ்ஜைப் புற்று, ரத்தப் புற்று, நினநீர்க்கட்டிப் புற்று, தைராய்டு சுரப்பிப் புற்று போன்றவை அதிகம் உள்ளதை நாங்கள் எம் ஆய்வில் கண்டிருக்கிறோம். எங்கள் ஆய்வின் முடிவுகள் தவறானவை என்று கல்பாக்க அணுமின் நிலைய அதிகாரிகள் இன்றுவரை அறிக்கைமேல் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்களேயொழிய அவர்களது கூற்றினை அறிவியல் அடிப்படையில் நிறுவுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. அவர்களின் இந்த நிலைப்பாடே கூடங்குள அணுமின் நிலையத்தின் மூலவரான திரு.அகர்வால் அவர்களும் புற்றுநோயால் இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்திற்கு வலுவூட்டுவதாக அமைந்திருக்கிறது.

பிப்ரவரி 8 ஆம் தேதியன்று அவரது மரணச் செய்தியை வெளியிட்ட இந்து நாழிதழ் மேலும் ஒரு செய்தியைக் கூடுதலாகக் கூறியிருந்தது.

”திரு.அகர்வால் அவர்கள் கூடங்குளம் பகுதி கிராம மக்களால் பெரிதும் விரும்பப் பட்டவர். இதன் காரணமாகவே பலரும் தங்கள் குழந்தைகளுக்கு “அகர்வால்” என்று பெயரிட்டு மகிழ்ந்தனர்”.

அது உண்மையாகக் கூட இருக்கலாம்.

சதா ”பாதுகாப்பு, தைரியம், புற்றுநோய் அற்ற உலகம்” என்று பேசிக்கொண்டிருந்த தங்களால் விரும்பப்பட்ட முதன்மை அதிகாரியானவர் திடீரென்று இறந்துபோனார் என்பதை எப்படி அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியும்? அவரது மரணத்திற்கான காரணத்தை கூடங்குள அணுமின் நிலைய நிர்வாகம் ஏன் வெளிப்படையாக அறிவிக்கவில்லை? ”திரு.அகர்வால் அவர்களை அணு உலையால் கொடுக்கப்பட்ட புற்றுநோய்தான் வீழ்த்தியிருக்கிறது என்றிருக்கும்போது சாதாரண மனிதர்களான நாமெல்லாம் எம்மாத்திரம்?” என்ற சந்தேகப் பேச்சுக்கு அணு உலை நிர்வாகம் ஏன் தக்க அறிவியல் சான்றுகளை அளித்து முற்றுப்புள்ளி வைக்க மறந்தது?

………………………………………………

பரமார்த்த குருக்களின் கூடங்குள அணு மின் நிலையம்


குருவே சரணம்!

21 செப்டம்பர் 2011. இரவு 10 மணி. வீட்டு போன் அலறியது. எடுத்தேன். பேசியவர் எனது முன்னாள் நண்பர் ஒருவரின் சகோதரர்.

அண்ணா! வணக்கம். சென்னை பல்கலைக்கழகத்தில் ஆந்த்ரபாலஜி துறையில் பி.எச்.டி படித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் உதவி அவசரமாகத் தேவைப் படுகிறது.”

சொல்லுங்கள்! என்ன செய்ய வேண்டும்?”

கூடங்குளம் பிரச்சினை குறித்து கடந்த காலத்தில் நீங்கள் எழுதிய கட்டுரைகளையும், உங்கள் நண்பர்கள் எழுதிய கட்டுரைகளையும் கொடுத்து உதவ முடியுமா?”

கட்டாயம் அனுப்பி வைக்கிறேன். இணையைத்திலேயே பல கட்டுரைகள் இருக்கின்றன…. அது சரி! கூடங்குளம் பற்றி என்ன இத்தனை ஆர்வம்? காரணம் தெரிந்து கொள்ளலாமா?”

எங்கள் டிப்பார்ட்மெண்டில் இருந்து இம்பேக்ட் அசஸ்மெண்ட் ( EIA – சுற்றுச்சூலலின் மீதான தாக்கம் குறித்த அறிக்கை ) செய்யப் போகிறோம். அதற்காகத்தான்!”

தலை கிறு கிறுத்தது.

அதைத்தான் 2005 ஆம் ஆண்டிலேயே நாக்பூரில் உள்ள நீரி (NEERI) நிறுவனம் செய்து விட்டதே? புதிதாக ஒரு இம்பேக்ட் அஸ்ஸெஸ்மெண்டின் அவசியம்? அதுவும் மானுடவியல் துறையால்? புரியவில்லையே!” என்றேன்.

சாரிண்ணா! தவறாக சொல்லி விட்டேன்! உண்மையில் நாங்கள் செய்யப்போவது இம்பேக்ட் அசெஸ்மெண்ட் இல்லை! செப்டம்பர் 11 ஆம் தேதியில் இருந்து கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக மக்கள் உண்ணாவிரதமிருந்து போராடி வருகிறார்களேஅவர்களுக்குத் தவறான தகவல்களை யார் யார் கொடுத்து வருகிறார்கள் என்பதையும், அந்தத் தகவல்களின் தன்மையையும் ஆராய்ந்து மக்களின் மனதில் எப்படிப்பட்ட அச்சங்களெல்லாம் உள்ளது என்பதைக் கண்டறிந்து அவற்றை எவ்வாறு களைவது என்பதற்கான வழிமுறகளை முன் வைப்பதற்கான வேலையில் எங்கள் துறை இறங்கியுள்ளது. என்னிடம் இதுபற்றி சொன்னார்கள். உங்கள் நினைவு வந்தது. அதற்காகத்தான் உங்களை அழைத்தேன்.”

இதனை உங்கள் துறை தன் சொந்த ஆர்வத்திலிருந்து செய்கிறதா? அல்லது தேனி மாவட்டம் தேவாரத்தில் உருவாகி வரும் “நியூட்ரினோ” திட்டத்தினை எதிர்த்து நின்ற மக்களை ”அமைதிப்” படுத்துவதற்கான வழிமுறைகளை அறிந்துகொள்வதற்காக மதுரை அமெரிக்கன் கல்லூரியின் சமூகவியல் துறைக்கு அணுசக்தித்துறை காண்ட்ராகட் கொடுத்ததே! அதைப் போல இந்தப் பணியையும் உங்களுக்கு ஒரு காண்ட்ராக்டாக அது கொடுத்திருக்கிறதா?”

ஆமாம். அணுசக்தித் துறைதான் கொடுத்திருக்கிறது. வேறு விவரங்கள் எனக்குத் தெரியாது. மேடத்திற்குத்தான் தெரியும்.”

மேடம் என்றால்?”

மானுடவியல் துறையில் உதவிப் பேராசிரியராக இருக்கும் டாக்டர் சுமதி மேடம்

ஆமாம்.”

சரி நண்பா! செப்டம்பர் 27 ஆம் தேதியன்று முதலமைச்சர் அவர்களிடம் கூடங்குளம் பற்றி விவாதிப்பதற்காக பிரதம மந்திரி நேரம் ஒதுக்கியிருக்கிறார். அதற்கு முன்பாக உங்கள் அறிக்கை அணுசக்தித் துறையிடம் சேர வேண்டும். உங்கள் அவசரம் எனக்குப் புரிகிறது. என்னிடம் உள்ள கட்டுரைகளை கட்டாயம் அனுப்பி வைக்கிறேன். நன்றி!”

போனை வைத்த பிறகு மனதில் ஏனோ பரமார்த்தகுருவின் உருவம் நிழலாடியது.

கடந்த 28 ஆண்டுகளாக இந்தத் திட்டத்தைப் பற்றி அணுசக்தித் துறையினர் பேசிவருகிறார்கள். என்றாலும் 28 ஆண்டுகளாக மக்களின் மனோநிலை அவர்களுக்குப் பிடிபடவில்லை போலிருக்கிறது! அதனை அடுத்த மூன்றுநான்கு நாட்களில் ”அறிவியல்” ரீதியாக ப் பிடித்துக் கொடுக்க அவர்கள் ”சென்னைப் பல்கலைக் கழகத்தின் மானுடவியல் துறையை மந்திரவாதி போன்று நம்பியிருக்கிறார்கள்! இதற்கான எம்..யு.(MoU) –வும் கையெழுத்து போட்டுவிட்டார்கள் போலிருக்கிறது! இவ்வாறு “பிடிக்கப்பட்ட” மக்களின் மனோநிலையை அவர்கள் மேதகு பிரதம மந்திரியிடம் வழங்குவார்கள். அதன் அடிப்படையில் தமிழக மக்களின் கூடங்குளம் திட்டம் குறித்த அச்சங்கள் அனைத்தையும் தீர்க்க வழிவகை செய்வதாக தமிழக முதல்வரிடம் பிரதமர் உறுதி அளிப்பார்.”

1998 ஆம் ஆண்டிலிருந்து எனது நண்பர்களும் நானும் அணுசக்தித் துறையினரின் தமிழ் நாட்டுச் செயல்பாடுகளைப் பார்த்து வருகிறோம். துன்பம் மிக்க கோமாளித்தனமான இந்த அனுபவங்கள் குறித்து பல புத்தகங்களையும், கட்டுரைகளையும் எழுதியிருக்கிறோம். பலருடன் பல சமயங்களில் கலந்துரையாடியிருக்கிறோம். விவாதித்திருக்கிறோம். இதனால் ஏனோ மத்திய உளவுத் துறையினரின் கேள்விகளுக்கும் உள்ளாகியிருக்கிறோம்.

இந்த 13 ஆண்டுகளில் அவர்களிடம் நாங்கள் எதைக் கண்டோமோ, அதே “பரமார்த்த நிலையைத்தான்” இன்றும், இந்தக் கடைசி நிமிடத்திலும் காண்கிறோம்.

தமிழ் நாட்டில் அறிவியலின் பெயரால் இன்றுவரை அவர்கள் அடித்துவரும் லூட்டிகள் சிலவற்றைத் தொகுத்து அளிப்பதுவே இந்த வலைபூவைத் தொடங்கியிருப்பதற்கான காரணமாகும்.

பரமார்த்தகுருக்களின் கைகளில்தான் நம் உயிரும், உடமையும் ”பாதுகாப்பாக” இருக்கிறது என்பதை அறிந்துகொண்டு இனி நம் பயணத்தைத் தொடர்வோம்…..