அணுசக்தியும் தமிழ்நாடு அரசும்


) கூடங்குள அணு உலைகளுக்குத் தமிழ்நாடு அரசு அளித்த அனுமதியில் இருந்து வெளிப்பட்ட விபரீத உண்மை

1988 நவம்பர் 20 ஆம் தேதியன்று சோவியத் அதிபர் திரு.கோர்பச்சேவும் இந்தியப் பிரதமர் திரு.ராஜீவ் காந்தி அவர்களும் கூடங்குள அணுமின் திட்டத்தில் கையெழுத்திட்டனர். தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்த அந்த நாளில் ஆளுனராகப் பதவி வகித்தவர் திரு.பி.சி.அலெக்சாண்டர்.

1989 ஜனவரி 29 இல் தி.மு.. ஆட்சி அமைத்தது. ஆட்சி அமைத்த 18 வது நாளில் அதாவது 16-2-1989 அன்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறை கூடங்குள அணுமின் திட்டத்திற்கான தன் அனுமதியை வழங்கியது. அந்த அனுமதியில் கையொப்பமிட்டவர் தமிழக அரசின் செயலாளராக இருந்த திரு.D.சுந்தரேசன் IAS.

அவர் வழங்கிய அனுமதியானது தமிழக அரசிற்கு அணு உலைகள் குறித்து இருந்த அறிவின்மையையும், அசிரத்தையையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.

இரண்டு 1000 மெகாவாட் வி.வி..ஆர் அணு உலைகளுக்கே அணுசக்தித் துறை அனுமதி கோரியிருந்தது. ஆனால் தமிழக அரசோ எவ்வளவு மெகாவாட் அணு உலைகளுக்கு என்றெல்லாம் குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக அணு உலைகளுக்கு அனுமதியை வழங்குவதாக அறிவித்தது!

ஏழு மாதம் கழித்து தமிழ்நாடு அரசின் செயலாளராக இருந்த திரு.A.S.ஜெயச்சந்திரன் BA அவர்கள் 13.9.1989 ஆம் தேதியிட்ட கடிதத்தில் தமிழ்நாடு அரசிற்கு அணுசக்தி என்றால் என்ன என்றே தெரியாது என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தினார்.

அணு சக்தித் துறை அனுமதி கோரியிருந்த இரண்டு 1000 மெகாவாட் அணு உலைகளுக்குப் பதிலாக அவர் நான்கு 500 மெகாவாட் அணு உலைகளுக்கு அனுமதியை வழங்கிவிட்டிருந்தார்!

அதோடு நிற்கவில்லை! இந்த அனுமதியை தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறையின் தலைவர், கூடங்குளத் திட்டத்திற்கான நிர்வாக இயக்குனர், பாபா அணுசக்தி ஆய்வுக் கழகத்தால் முன்மொழியப்படும் ஒரு உறுப்பினர், மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒரு உறுப்பினர் ஆகியோர்களால் ஆன ஒரு சிறப்புக் குழு பரிசீலிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அடுத்து வந்த காலத்தில் அவரால் கூறிப்பிடப்பட்டிருந்த சிறப்புக்குழுவானது தவறாக அளிக்கப்பட்டிருந்த அந்த அனுமதியை மாற்றியமைக்க எந்த வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை!

கருணாநிதி அரசால் நான்கு 500 மெகாவாட் அணு உலைகளுக்கு வழங்கப் பட்ட தவறான அனுமதியைக் கொண்டே இன்று கூடங்குளத்தில் இரண்டு 1000 மெகாவாட் அணு உலைகளின் கட்டுமானப் பணி தொடர்ந்து கொண்டிருக்கின்றது!

அணு உலைக் கட்டுமானப் பணியினைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டசபையில் சமீபத்தில் நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதா கூட கருணாநிதி அரசால் தவறாகக் கொடுக்கப்பட்ட இந்த அனுமதியை ரத்து செய்ய இன்றுவரை எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை!

) 2001 ஜூலை 28 – கல்பாக்க அணு உலை விபத்திற்கான ஒத்திகையில் கிடைத்த நேரடி அனுபவம்!

2001 மே 21 ஆம் தேதியன்று செல்வி.ஜெயலலிதா இரண்டாவது முறையாக முதல்வரானார்.அவரது அமைச்சரவை பதவியேற்ற 22 வது நாளில் அதாவது ஜூன் 12 ஆம் தேதியன்று கல்பாக்கத்தில் புதிதாக கட்டப்படவிருக்கும் 500 மெகாவாட் திறனுடைய PFBR அணு உலைக்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கான அறிவிப்பு வெளியானது. காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 15 ஆம் தேதியன்று அந்தக் கூட்டம் நடத்தப்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியியலாளர் திரு.கண்ணன் அறிவித்தார்.

1994 ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் சட்டத்தின்படி பொதுமக்கள் கருத்துக் கேட்புக்கூட்டம் நடத்துவதற்கு 30 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையில் Coastal Action Network என்ற தன்னார்வ அமைப்பு இந்த அறிவிப்பினை எதிர்த்து ஜூன் 13 ஆம் தேதியன்று பொதுநல வழக்கு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்தது. ஜூன் 14 ஆம் தேதியன்று இந்த வழக்கினை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், 1994 ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் சட்டத்தைப் பின்பற்றவேண்டும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு உத்தரவிட்டது. இதன் காரணமாக ஜூன் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தினை மாசுக்கட்டுப்பாடு வாரியம் ரத்து செய்யவேண்டி வந்தது. புதிய தேதி ஜூன் 21 ஆம் தேதியன்று அறிவிக்கப் பட்டது. ஜூலை 27 ஆம் தேதியன்று பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்தேறியது.

இந்தக் கூட்டத்தில் (ஒரே ஒருவரைத் தவிர)பேசிய அனைவருமே கல்பாக்கத்தில் புதிய அணு உலையைக் கட்டக் கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்தனர். மக்களின் ஒருமித்த கருத்தைக் கேட்ட அணுசக்தி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது. கூட்டம் முடிவடைந்த பிறகு அணு உலைத் திட்டத்தின் இயக்குனரான திரு.போஜே ஊடகங்களுக்கு ஏதேச்சதிகாரமான பேட்டி ஒன்றினை அளித்தார்.

“ கருத்துக் கேட்புக் கூட்டம் முடிவடைந்திருக்கிறது. மக்கள் பெரிதும் உணர்ச்சிவசப் படுகிறார்கள். தொழில்நுட்பம் தொடர்பான திட்டத்தை வெறும் உணர்ச்சியைக் கொண்டு தீர்மானிக்கக் கூடாது. சுற்றுச்சூழல் அமைச்சகம் மக்களின் உணர்ச்சிகளைக் கருத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது. எது எப்படி இருந்தாலும், அணு உலையின் கட்டுமானப் பணிகள் டிசம்பர் மாதத்தில் தொடங்கும்” என்றார் அதிரடியாக.

அணு உலையைக் கட்ட சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளிக்காவிட்டால்?” என்று ஊடகவியலாளர்கள் கேட்டபோது புன்னகைத்த அவர் “இந்திய நாட்டின் பாதுகாப்போடு தொடர்புடைய திட்டம் ஒன்றை மத்திய அரசால் கைவிட முடியுமா என்ன?” என்று கூறி அவர்களை அதிர்ச்சி அடைய வைத்தார்.

மக்களின் உணர்ச்சிகளைக் கருத்தில் கொள்ள வேண்டுமா கூடாதா என்பதனை அதற்கான குழு தீர்மாணிக்கட்டும்; அணு உலை நிர்வாகத்தினர் இது குறித்து ஊடகங்களில் பேசுவதை வரவேற்க முடியாது�என்று மாவட்ட சுற்றுச்சூழல் பொறியியலாளர் ஜூலை 30 ஆம் தேதியன்று அறிவித்தார்.

மக்கள் தமது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அதனை விவாதப் பொருளாக அணுசக்தித் துறையினர் மாற்றக் கூடாது” என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஷீலா ராணி சுங்கத் கேட்டுக் கொண்டார்.

……………..

வெற்று உணர்ச்சியை நம்பியுள்ள மூடர்களே மக்கள் என்று ஊடகவியலாளர்களிடம் திரு.போஜே கூறியதற்கு அடுத்த நாள் “அணு உலையில் வெடிப்பு ஏற்பட்டால் எவ்வாறு தப்பிப்பது” என்பதற்கான ஒத்திகையை அணுசக்தி நிர்வாகம் கல்பாக்கம் பகுதியில் நடத்தியது. புதிதாகக் கட்டப்படவுள்ள அணு உலைகளுக்கு அனுமதி கோரும்போது அணு உலை விபத்தின்போது மக்களை வெளியேற்றுவதற்கான திட்டத்தினை அணு உலை நிர்வாகம் நடைமுறைப்படுத்தும் ஒத்திகையினை செய்து காண்பிக்க வேண்டும் என்பது 1987 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ள சட்டம்.

ஜூலை 28 காலையில் ஒத்திகை தொடங்கியது. காஞ்சிபுரம் ஆட்சியராக இருந்த திரு.ராஜாராமன், கல்பாக்கத்தில் உள்ள இரண்டு MAPS அணு உலைகளின் தலைவரான திரு.ஹரிஹரன் ஆகியோர் இதற்குத் தலைமை தாங்கினர்.

ஒத்திகைக்கு முன்பாக திரு.ராஜாராமன் கல்பாக்கத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்களை சந்தித்தார். அணு உலைகளுக்கு தெற்கே அமைந்துள்ள மெய்யூர் குப்பம் கிராமத்தில் உள்ள மீனவ மக்களிடம் அவர் பேசும்போது ”அணு உலை நிர்வாகத்தின் நடவடிக்கைகள் சரியில்லை என்று நீங்கள் அனைவரும் கூறுகிறீர்கள். அதற்கான ஆதாரங்களை வைத்திருக்கிறீர்களா? ஆதாரமற்ற புகார்களை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆதாரம் இருக்கும் படசத்தில் கல்பாக்கம் அணு மின் நிலைய நிர்வாகத்துடன் கலந்து பேசி அதற்கான தீர்வை கண்டறிய முடியும்” என்றார்.

அவரிடம் இந்த ஆதாரங்களை மக்கள் சமர்ப்பிக்கும் முன்பாகவே அணுமின் நிலைய நிர்வாகிகள் முந்திக்கொண்டார்கள்.அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே அவரிடம் தம் உண்மை முகத்தை அவர்கள் தாமாகவே முன்வந்து தக்க ஆதாரங்களுடன் வெளிப்படுத்திக் கொண்டார்கள்!

………………………….

அணு உலை விபத்தின்போது அணு உலையை சுற்றிய 16 கிலோ மீட்டர் பகுதியில் வசிக்கும் மக்களை விபத்தினால் ஏற்படும் விளைவுகளில் இருந்து காப்பாற்றும் அரசு சார் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பவர் அந்த மாவட்டத்தின் ஆட்சியரேயாவார். விபத்து குறித்த முதல் செய்தியை அணு உலை நிர்வாகம் அவரிடம்தான் தெரிவிக்க வேண்டும். இதை பிரச்சினைகள் ஏதும் இல்லாமல் நடைமுறைப் படுத்துவதற்காக அவசர கால கட்டுப்பாட்டு மையம் (Emergency Control Center – ECC) என்ற பெயரில் 24 மணி நேரமும் இயங்கும் ஒரு சிறப்பு அலுவலகம் உள்ளது. மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் தெரிவிப்பதற்கான அனைத்து தொலைதொடர்பு கருவிகளும், வரைபடங்களும் அங்குதான் உள்ளன.

கல்பாக்கம் அணுமின் வளாகத்திலிருந்து 16 கிலோமீட்டருக்குள் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேற்றி 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பல்வேறு இடங்களில் தற்காலிகமாகத் தங்கவைப்பதுதான் பாதுகாப்பு நடவடிக்கையின் முதல் கட்டம். அதன்படி 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடப்பாக்கம் கிராமத்தில் உள்ள பி.கிருஷ்ணா அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மக்களையும், அவர்களின் வளர்ப்புப் பிராணிகளையும் கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்களையும், வளர்ப்புப் பிராணிகளையும் சந்திப்பதற்காக திரு.ராஜாராமன் பள்ளி வளாகத்தில் காத்திருந்தார். அவசரகால கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கம்பியில்லா தொலைபேசியின் மூலம் ”விபத்து நடந்துவிட்டது” என்ற செய்திக்காக அவர் காத்திருந்தார்.

ஆனால் அவருக்கு செய்தியேதும் வந்தபாடில்லை!

அவசரகாலக் கட்டுப்பாட்டு மையத்திலிருந்த கம்பியில்லாத் தொலைபேசி அனைத்துமே பழுதாயிருந்தன! திரு.ராஜாராமனிடம் அணுமின் நிலைய அதிகாரிகளால் அளிக்கப்பட்ட கம்பியில்லா தொலைபேசியும் பழுதடைந்த ஒன்றாகவே இருந்தது!

பள்ளி வளாகத்திற்கு வந்து சேரவேண்டிய மக்களும், அவர்தம் வளர்ப்புப் பிராணிகளும்கூட கடைசிவரை வந்து சேரவேயில்லை!

கடைசியில், வேறு வழியின்றி அந்த மக்களை சந்திக்காமலேயே அணு மின்நிலைய நிர்வாகத்தின் திறமை குறித்த தக்க சான்றுகளுடன் திரு.ராஜாராமன் காஞ்சிபுரத்திற்குப் புறப்பட்டு சென்றார்!

) சுனாமியின் போது மூடிக்கிடந்த அவசர கால கட்டுப்பாட்டு மையம்

2004 டிசம்பர் 26 காலையில் சுனாமி தமிழ்நாட்டின் கடற்கரையைத் தாக்கியது. கல்பாக்கம் பகுதியில் சுனாமியால் 60-க்கும் மேலானோர் இறந்து போனார்கள். அதில் 37பேர் அணுசக்தி நகரியத்தைச் சேர்ந்தவர்கள். அதில் 4 பேர் அணுமின் நிலையத்தின் பணியாளர்கள். 33பேர் அணுமின் நிலையப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களாவர்.சுமார் 670 குடும்பங்கள் அவர்களது வீடுகளைக் காலிசெய்துவிட்டு வேறு இடங்களுக்கு செல்லவேண்டியிருந்தது. அணுசக்தி நகரியத்தில் அமைந்திருந்த மருத்துவமனை சுனாமியால் கடுமையான பாதிப்புக்குள்ளாகியது.

சுனாமியால் இரண்டு MAPS அணு உலைகள் பாதிப்புக்குள்ளாகவில்லை. என்றாலும்கூட, புதிதாகக் கட்டப்பட்டு வந்த PFBR அணு உலைக்காகத் தோண்டப்பட்டிருந்த குழியானது சுனாமி அலையால் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது. அந்த அணு உலை ஏற்கனவே கட்டப்பட்டு இயங்கும் நிலையில் இருந்திருந்தால் அது மிகவும் மோசமான அணு உலை விபத்தை உருவாக்கியிருக்கக் கூடும். சுனாமியின் போது இந்த இடத்தில் பணிசெய்துகொண்டிருந்த பீகார் மற்றும் ஒரிசாவைச் சேர்ந்த சுமார் 150 ஒப்பந்தப் பணியாளர்கள் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவசரகால நடவடிக்கையை ஒன்றிணைக்கும் மையமும், அதற்கான அனைத்துக் கருவிகளையும் கொண்டிருக்கும் ”அவசரகாலக் கட்டுப்பாடு மையம்” சுனாமி தினத்தன்றும், அதற்கடுத்துவந்த பல நாட்களிலும் பூட்டப்பட்டு கிடந்தது. சுனாமியால் பாதிக்கப்பட்ட அணுமின்நிலைய மருத்துவமனையில் இருந்து வெளியேறிய நோயாளிகளைத் தங்கவைக்கக் கூட அந்த மையம் திறக்கப்படவில்லை.

சுனாமியால் கல்பாக்கம் அணுமின் வளாகத்திற்கு என்ன ஆயிற்று என்பதை காஞ்சிபுரம் ஆட்சியருக்கு தகவல் தெரிவிப்பதற்காகக்கூட அது திறக்கப்படவில்லை!

செய்தித்தாள்களில் இதுகுறித்த செய்தி வெளியான பின்னரும்கூட காஞ்சிபுரம் ஆட்சியரோ, செல்வி.ஜெயலலிதா தலைமையில் இருந்த அன்றைய தமிழ்நாடு அரசோ மக்களின் வாழ்வைப் பாதிக்கவல்ல அணுமின் நிர்வாகத்தின் அசிரத்தையான இந்த செயல்பாட்டை கேள்விக்குள்ளாக்கவில்லை!

) 2005 ஜனவரி 24 சுனாமி அறிவிப்பும் அவசரகால கட்டுப்பாட்டு மையத்தின் மீழாத் தூக்கமும்

2005 ஜனவரி 24 ஆம் தேதியன்று நிக்கோபார் தீவுகளையடுத்து காலை 9.46 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதனால் சுனாமி வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் சன் செய்திகள் தொலைக்காட்சியானது செய்தியொன்றை வெளியிட்டது. காலை 10 மணிக்கு இந்த செய்தி கல்பாக்கம் அணுசக்தி நகரியத்தில் வெகுவேகமாகப் பரவியது. எனினும் இதுகுறித்து அவசரகாலக் கட்டுப்பாட்டு மையம் எந்தவித தற்காப்பு ந்டவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை.

கல்பாக்கம் அணுசக்தி நகரியத்தில் அணுசக்தி செண்ட்ரல் ஸ்கூல், மற்றும் இரண்டு கேந்திரிய வித்யாலயா என்ற மூன்று பள்ளிக்கூடங்கள் உள்ளன. சுனாமி குறித்த செய்தியை இந்தப் பள்ளிகளின் நிர்வாகங்கள் தெரிந்துகொண்டதும் அவர்களுக்கு முதலில் என்ன செய்வது என்று தெரியவில்லை. பிறகு சுமார் 11 மணியளவில் எல்லா குழந்தைகளையும் உடனடியாக வீட்டிற்கு அனுப்ப முடிவு செய்தார்கள். பள்ளிப் பேருந்துகள் இல்லை. கால் நடையாகவே இந்தக் குழந்தைகள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

வீட்டிற்கு அவர்கள் திரும்பிச் சென்ற சாலையானது தாழ்வான பகுதியில் அமைந்த ஒன்றாகும். 2004 டிசம்பர் 26 சுனாமியின்போது இந்த சாலை சுனாமியின் நேரடியான தாக்குதலுக்கு உள்ளானது. சுனாமி நிகழ்ந்து 30 நாட்கள் முடியாத நிலையில், நகரியத்தில் மட்டுமே சுமார் 37 பேர் உயிரிழந்த நிலையில் குழந்தைகளை பள்ளிக் கட்டிடங்களின் மேல் மாடியில் தங்கவைக்க வேண்டும் என்ற முடிவை பள்ளி நிர்வாகங்கள் எடுக்கவில்லை. மாறாக, அபாயம் மிகுந்த தாழ்வான சாலையில் நடந்து செல்ல குழந்தைகள் பணிக்கப்பட்டார்கள்.

இப்படிப்பட்ட அசம்பாவிதம் நடந்துவிடாமலிருக்க அணு உலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான அதிகாரிகள் நகரிய மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தாதையே இந்த நிகழ்வு வெளிச்சம் போட்டுக் கண்பிக்கிறது. மேலும், இரண்டாவது முறையாக சுனாமி குறித்த செய்தி வந்த உடனேயாவது அவசரகால கட்டுப்பாட்டு மையம் நடவடிக்கையில் இறங்கியிருக்க வேண்டும். ஆனால் இந்த முறையும் அது தன் கடமையிலிருந்து தவறியிருந்தது.

) இருட்டில் வெளிப்பட்ட ஒளியும், இராணுவ அரசியலால் பெறப்பட்ட அனுமதியும்

கல்பாக்கத்தில் கட்டப்பட்டுவரும் PFBR அணு உலைக்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் 2001 ஜூலை 21 ஆம் தேதியன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு முன்பாக ஜூலை 17 ஆம் தேதியன்று “பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கான மருத்துவர் குழு” இந்த அணு உலைக்காக MECON நிறுவனத்தால சமர்ப்பிக்கப்பட்ட “சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை” எவ்வாறு பிழைகள் நிறைந்த அறிக்கையாக உள்ளது என்பதையும், கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் உண்மை நிலை என்ன என்பதையும் விளக்கிடும் ”PFBR – A threat to life” என்ற ஆய்வுப் புத்தகத்தை காஞ்சிபுரம் சுற்றுச்சூழல் பொறியியளாளரான திரு.கண்ணன் அவர்களிடம் சமர்ப்பித்தது.

ஆய்வறிக்கையை பெற்றுக்கொண்ட திரு.கண்ணன் அதனைத் தான் பெற்றுக்கொண்டதாக முறைப்படிக் கையொப்பம் இட்டு ரசீது ஒன்றினை அளித்தார். பின்னர் அந்த ஆய்வறிக்கையை சுமார் ஒரு மணி நேரம் ஆழ்ந்து படித்தார். அதுவரை நாங்கள் காத்திருக்க முடியுமா என்றும் கேட்டுக் கொண்டார்.

ஆய்வறிக்கையைப் படித்து முடித்தபிறகு வேகமாக எழுந்துவந்து எங்களுடன் கைகுலுக்கித் தன் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டிய அவர் கல்பாக்கத்தில் உண்மையில் என்னதான் நடக்கிறது என்பது குறித்து அறிந்துகொள்ள உதவும் சார்புநிலையற்ற ஆவணங்களையோ அல்லது புத்தகங்களையோ படித்ததில்லை என்றும் இதுதான் அது குறித்து அவர் படிக்கும் முதல் புத்தகம் என்றும் எங்களைப் பாராட்டினார். மேலும் அந்தப் புத்தகத்திற்கு வேறு பிரதிகள் உண்டென்றால் அவற்றை பகிர்ந்துகொள்ள இயலுமா என்றும் கேட்டுக் கொண்டார். கூடுதல் பிரதிகளை நாங்களும் அவரிடம் அளித்தோம்.

27 ஆம் தேதியன்று நடந்த பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அவர் மிகவும் நடுநிலையோடு நடந்துகொண்டார். கூட்டத்திற்குப் பிறகு அணு உலையின் தலைவர் ஊடகங்களுக்குத் தன்னிச்சையாகப் பேட்டி அளித்தபோது அந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கள் ”வரவேற்கத்தக்கதல்ல” என்று நாகரீகமாக ஆனால் உறுதிபட அணு உலைத் தலைவரிடம் கூறினார். இதே போன்ற நிலைப்பாட்டையே தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் தலைவராக இருந்த திருமதி.ஷீலா ராணி சுங்கத் அவர்களும் எடுத்தார். அவர்களின் இந்த நிலைப்பாட்டை அணுசக்தித் துறை விரும்பவில்லை.

மத்திய சுற்றச்சூழல் அமைச்சகத்திடம் இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டம் குறித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அளித்த அறிக்கை நடுநிலையானதாக இருந்த காரணத்தாலேயே இந்த அணு உலையின் பணிகள் தாமதமாயின. தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையை உள்ளடக்கிய பல கலந்தாய்வுக் கூட்டங்கள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் நடத்தப்பட்டன.

இந்த கலந்தாய்வுக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு முன்பாக கல்பாக்கம் அணுமின் நிலையம் குறித்து எங்களிடம் உள்ள வேறு ஆய்வறிக்கைகள் மற்றும் தரவுகளைப் பகிர்ந்து கொள்ள இயலுமா என்று திருமதி.ஷீலா ராணி சுங்கத் அவர்கள் திரு.கண்ணன் மூலமாக வாய்மொழியாக கேட்டுக் கொண்டார். நாங்களும் எங்களிடம் இருந்த அனைத்துத் தரவுகளையும் அவரிடம் பகிர்ந்து கொண்டோம்.

அணு உலைக்கு அடுத்த 40 ஆண்டுகளுக்குத் தேவையான தண்ணீர் குறித்த ஆய்வு, சுமார் 25 ஆண்டுகளாகக் கல்பாக்கத்தில் இயங்கிவரும் இரண்டு அணு உலைகளால் ஏற்பட்டுள்ள நோய்கள் குறித்த ஆய்வு, கல்பாக்கம் கடற்கரையின் தன்மை குறித்த ஆய்வு, கல்பாக்கத்தில் பூகம்பம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறித்த ஆய்வு ஆகியவற்றை மேற்கொள்ளாமலேயே இந்த அணு உலையைக் கட்டுவதற்கான அனுமதியை அணுசக்தித் துறை கேட்டுள்ளது விவாதப் பொருளாக மாறியது. மேலும் அணு உலை விபத்து ஏற்பட்டால் அதனை கைகொள்வதற்கான திறனற்ற நிலை குறித்தும் விவாதங்கள் மேலெழும்பின.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையால் முன்வைக்கப்பட்ட இந்த வாதங்களால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாகவே அணு உலையின் பாதுகாப்புடன் தொடர்புடைய மேற்கூறிய ஆய்வுகளையும், திறனையும் முறைப்படி நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அதன்பிறகே அணு உலைக்கான அனுமதி அளிக்க முடியும் என்ற முடிவை வேறு வழியின்றி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அணு சக்தித் துறையிடம் தெரிவிக்க வேண்டி வந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகும் என்று அணு உலை நிர்வாகிகள் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. எதேச்சதிகாரமாக ஊடகங்களில் பேட்டி அளித்த திரு.போஜே,திட்டத்தின் தன்மை குறித்து “கரண்ட் சயின்ஸ்” போன்ற அறிவியல் சஞ்சிகைகளில் எழுத நிர்ப்பந்திக்கப்பட்டார். ஆனால் அவரது கட்டுரை நடுநிலையான விஞ்ஞானிகள் வெகுவாகக் கலந்து கொண்ட அவருக்கு சாதகமில்லாத ஆனால் செழுமையான விவாதம் ஒன்றை அந்த சஞ்சிகையில் ஏற்படுத்தியது.

2001 ஆம் ஆண்டின் இறுதியில் கிடைத்திருக்க வேண்டிய PFBR அணு உலைக் கட்டுமானப் பணிகளுக்கான அனுமதி 2002மே 24 ஆம் தேதிவரை கிடைக்கவில்லை.

இவ்வாறு அனுமதி தள்ளிப்போய்க்கொண்டேயிருந்த சூழ்நிலையில், மே 24 ஆம் தேதியன்று பாகிஸ்தான் நாட்டில் நடந்த ஒரு நிகழ்வானது அந்தத் திட்டத்திற்கு அனுமதியை அதிரடியாக வாங்கிக் கொடுத்தது!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: